பாகிஸ்தான் பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதில் பாகிஸ்தான் அதிபர் என்று குறிப்பிட்டு இம்ரான்கான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் லெட்டர் பேடில் பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது. அதில், பாகிஸ்தான் அதிபர் (பிரதமரை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்) இம்ரான் கான் கையொப்பம் உள்ளது.

அந்த பத்திரிகை செய்தியில், "கராச்சி ஸ்டாக் எக்ஸ்சேஜ் தொடர்பாக மு.க.ஸ்டாலின் காட்டிவரும் ஆர்வத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டிஎம்கே பிரைவேட் லிமிடெட் கம்பெனியை கராச்சி பங்கு சந்தையில் பட்டியலிட அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க என்ற நிறுவனம் உலகின் மிகப்பெரிய பணக்கார நிறுவனங்களுள் ஒன்று. பாகிஸ்தானின் பப்ளிக் லிஸ்டட் நிறுவனமாக தி.மு.க பதிவு செய்யப்படுகிறது.

தி.மு.க எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறது, பாகிஸ்தான் மக்களுக்கு துணை நிற்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் மக்களுடன் இணைந்து சந்திரயான் தோல்வியை தி.மு.க கொண்டாடியது. எங்கள் மண்ணில் தி.மு.க நிறுவனம் கால் பதித்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த பத்திரிகை செய்தியை அந்நாட்டு வெளியுறவுத் துறை 2019 செப்டம்பர் 7ம் தேதி வெளியிட்டது போல உள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் பத்திரிகை செய்தியை Anand Govindarajan என்பவர் 2020 ஜனவரி 21ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாகிஸ்தானுக்கு தி.மு.க எப்போது ஆதரவு தெரிவித்தது என்று தெரியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தாலே அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டும் பழக்கம் பா.ஜ.க-வினர் மத்தியில் உள்ளது. அது தொடர்பான அரசியலுக்குள் செல்லவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதில், பாகிஸ்தான் அதிபர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுவே இந்த பத்திரிகை செய்தி லெட்டர் பேடு போலியாக உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும் தகுந்த ஆதாரங்கள் கொண்டு அதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

பாகிஸ்தான் பிரதமருக்கு என்று தனி இணையதளம் உள்ளது. தன்னுடைய பத்திரிகை செய்திகள் அனைத்தையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னுடைய பக்கத்திலேயே வெளியிடுகிறார். அப்படி இருக்கும்போது வெளியுறவுத் துறை லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்விகள் எழுந்தன. குறிப்பிட்ட தேதியில் பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட அறிக்கைகளை ஆய்வு செய்தோம். செப்டம்பர் 7, 2019 அன்று பாகிஸ்தான் பிரதமர் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. மேலும், தி.மு.க-வுக்கு நன்றி கூறியது தொடர்பாக எதுவும் கிடைக்கவில்லை.

pmo.gov.pkArchived Link

சரி உண்மையில் இந்த பத்திரிகை செய்தியை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டதா என்பதை அறிய அதன் இணையதளத்துக்கு சென்றோம். இதில் குறிப்பிட்ட அந்த தேதியில் இது போன்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது தெரிந்தது. 2019 செப்டம்பர் 7ம் தேதி வெளியான பத்திரிகை செய்திகளின் எண் 350ஐ தாண்டியிருந்தது. ஆனால், ஸ்டாலின் தொடர்பான பத்திரிகை செய்தியின் எண் 83 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வெளியுறவுத் துறை லெட்டர் பேடில் நமக்கு 83வது பத்திரிகை செய்தி தொடர்பான ஆதாரம் கிடைக்கவில்லை.

mofa.gov.pkArchived Link

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பிஆர் நம்பர் 93/2019 அசல் பத்திரிகை செய்தி கிடைத்தது. அதை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிப்ரவரி 28, 2019 அன்று பதிவிட்டிருந்தார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தியிலும் அதே தேதி இருந்தது. அதில், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை ரோந்து பணியில் ஈடுபட்டு எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தியாவுடன் போர் புரியும் நோக்கத்தில் இந்த தாக்குதலை மேற்கொள்ளவில்லை, பாகிஸ்தான் வான் பரப்பில் எங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

Archived LinkSearch Link

இந்த பத்திரிகை செய்தின் முதல் வரியில் சில வார்த்தைகளை எடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இணையதளத்தில் தேடினோம். அப்போது, பிஆர் நம்பர் 83/2019 அறிக்கை கிடைத்தது. இதன் மூலம், பிஆர் நம்பர் 83/2019ல் பாகிஸ்தான் வான்படை தாக்குதல் பற்றி செய்தி வெளியாகி இருந்தது தெரிந்தது.

mofa.gov.pkArchived Link

நம்முடைய ஆய்வில்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அதிபர் என்று தவறாக குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட தேதியில் தி.மு.க, மு.க.ஸ்டாலின் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எந்த ஒரு பத்திரிகை செய்தியையும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதியில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையும் ஸ்டாலின் தொடர்பாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்ட அசல் பத்திரிகை செய்தி கிடைத்துள்ளது.

அதில், பாகிஸ்தான் வான் பரப்பில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய ரோந்து மற்றும் தாக்குதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு நன்றி என்று கூறி பாகிஸ்தான் பிரதமர் பத்திரிகை செய்தி வெளியிட்டார் என்று பகிரப்படும் பதிவு போலியானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமரா... அதிபரா? - சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian

Result: False