இளைஞர்கள் காதில் ஏர் ஹாரன் அடித்து தண்டனை கொடுத்தது பீகாரிலா… மத்திய பிரதேசத்திலா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

பீகாரில் நவராத்திரி விழாவின் போது ஏர் ஹார்ன் மூலம் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு அதே ஏர் ஹார்னை அவர்கள் காதில் அடித்து தண்டனை கொடுத்த போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இளைஞர்கள் சிலரின் காதில் போலீஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் சிலர் காதில் ஏர் ஹார்ன் வைத்து ஒலி எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் மற்றொரு இளைஞர் காதில் ஏர் ஹார்ன் ஒலிக்கும் காட்சி வருகிறது. வீடியோவுடன் “பீகாரில் நவராத்திரி பண்டிகையின் போது ஏர் ஹார்ன் மூலம் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்ததாக பிடிபட்ட இளைஞர்களின் காதில், அதே ஏர் ஹார்னை அடிக்க வைத்து தண்டித்த போலீசார்” என்று தமிழில் டைப் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வீடியோவை dinakaran daily newspaper என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 அக்டோபர் 6ம் தேதி வெளியிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இந்த வீடியோவை Sun News Tamil தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. நிலைத் தகவலில், “பீகாரில் நவராத்திரி பண்டிகையின் போது ஏர் ஹார்ன் மூலம் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக பிடிபட்ட இளைஞர்களின் காதில், அதே ஏர் ஹார்னை அடிக்க வைத்து தண்டித்த போலீசார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நவராத்திரி பண்டிகையின் போது ஏர் ஹார்ன் வைத்து பொது மக்களைத் தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டது. ஏர் ஹார்னை அவர்கள் காதிலேயே வைத்து அடித்து போலீசார் தண்டனை அளித்தனர் என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், தினகரன் மற்றும் சன் நியூஸ் வெளியிட்டிருந்த வீடியோவில் இந்த சம்பவம் பீகாரில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால், எது உண்மை என்ற குழப்பம் ஏற்படவே ஆய்வு செய்தோம்.

மத்தியப் பிரதேசம், ஏர் ஹார்ன், நவராத்திரி என சில கீ வார்த்தைகளைக் கூகுளில் தேடிய போது நமக்கு அது தொடர்பான செய்திகள் கிடைத்தன. jagran.com என்ற வட இந்திய ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் மத்தியப் பிரதேச போலீசின் புதுமையான தண்டனை ஐடியா என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஏர் ஹார்ன் ஒலித்து மக்களுக்கு தொந்தரவு கொடுத்த இரண்டு இளைஞர்களுக்கு அவர்கள் காதில் ஏர் ஹார்ன் ஒலிக்கச் செய்து தண்டனை அளித்த போலீசார் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவையும் பயன்படுத்தியிருந்தனர்.

Archive

மற்றொரு செய்தியில் நவராத்திரி திருவிழாவின் போது குற்றச் செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் விழிப்பாக இருக்கும்படி போலீசாருக்கு ஜபல்பூர் காவல் துறை கண்காணிப்பாளர்  அறிவுறுத்தியிருந்தார். சம்பவத்தன்று இளைஞர்கள் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களை போலீசார் பிடித்து அவர்கள் காதில் ஏர் ஹார்ன் அடித்தனர். சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதத்தை வைத்தே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு அறிவுரைகள் கூறி இனி இது போன்று நடக்கக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினோம் என்று நகர காவல்துறை கண்காணிப்பாளர் துஷார் சிங் கூறினார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: jagran.com I Archive 1 I bhaskar.com I Archive 2 I economictimes.indiatimes.com I Archive 3

தொடர்ந்து தேடிய போது ஜபல்பூர் பகுதி ஏபிபி நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் கூட இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது தெரிந்தது. தன்னுடைய ட்விட்டர் பதில் காதில் ஏர் ஹார்ன் அடித்தும், சாலையில் தோப்புக்கரணம் போட வைத்தும் தண்டனை வழங்கிய போலீஸ் என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive

இதன் மூலம், இந்த சம்பவம் பீகாரில் நடக்கவில்லை மத்தியப் பிரதேசத்தில் நடந்தது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், தினகரன் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களில் சமூக ஊடக பக்கங்களில் வெளியான வீடியோ தவறான தகவலுடன் கூடியது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மத்திய பிரதேசத்தில் ஏர் ஹார்ன் அடித்து பக்தர்களுக்கு தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் காதில் அதே ஏர் ஹார்ன் அடித்து தண்டனை கொடுத்த போலீஸ் வீடியோவை பீகாரில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இளைஞர்கள் காதில் ஏர் ஹாரன் அடித்து தண்டனை கொடுத்தது பீகாரிலா… மத்திய பிரதேசத்திலா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False