கிறிஸ்தவ பள்ளிகளில் இந்து மாணவர்களை அடிக்கும் பாதிரியார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கிறிஸ்தவ ஆலயத்தில் சிறுவர்களை பாதிரியார் தலைமுடியை பிடித்து ஆட்டி, தள்ளி விடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "*கிறித்தவ மிஷினரி பள்ளிகளில் படிக்கும் "இந்து" குழந்தைகளை பாதிரியார்கள் நடத்தும் விதத்தை பாருங்கள் மக்களே.... 😇😇*

*அடேய் பாதிரி உன்னை அந்த ஏசு கூட மன்னிக்கமாட்டார்டா." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கிறிஸ்தவ பாதிரியார் சிறுவர்களின் தலை முடியை பிடித்து ஆட்டி, தள்ளிவிடுகிறார். ஆனால், இவர்கள் எல்லாம் இந்து மாணவர்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் பதிவிட்டவர் தரவில்லை. இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்றும் குறிப்பிடவில்லை. மேலும் வீடியோவில் சில பெரியவர்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்து அந்த பாதிரியாரிடம் ஆசி வாங்க வருகின்றனர். அவர்களையும் அப்படியே செய்த அனுப்புகிறார். இவை எல்லாம் இந்த சம்பவம் பள்ளிக்கூடத்தில் நடக்கவில்லை என்பதை உறுதி செய்கின்றன.

வீடியோவில் உள்ள இடம் கத்தோலிக்க தேவாலயம் போல தெரிகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆலயத்தில் மிக முக்கியமான பகுதியாக கருதப்படும் பலிபீடம் எல்லாம் இருப்பதைக் காண முடிகிறது. பாதிரியாரும் கத்தோலிக்க பாதிரியார் அணியும் ஆடை அணிந்திருக்கிறார். பொதுவாக வேற்று மதத்தினரை அந்த இடத்திற்கு அனுமதிக்கமாட்டார்கள். மேலும், வீடியோவில் உள்ள பாதிரியார் உள்ளிட்டவர்களை பார்க்கும் போது இந்தியர்கள் போலவும் தெரியவில்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் உள்ளிட்ட புகைப்படங்கள் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இங்கிலாந்திலிருந்து வௌிவரும் dailymail.co.uk ஊடகத்தில் 2016ம் ஆண்டு இந்த வீடியோ தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியை இந்தியாவில் நம்மால் திறக்க முடியவில்லை. அந்த செய்தியின் சிறுபகுதியை காண முடிந்தது. அதில் இந்த சம்பவம் பிரேசிலில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: mirror.co.uk I Archive

இதன் அடிப்படையில் பிரேசிலில் சிறுவர்களை அடித்த கத்தோலிக்க பாதிரியார் என்று கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, 2016ம் ஆண்டு வேறு பல ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. ஆனால், அந்த செய்தியில் பிரேசிலில் எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிடவில்லை. ஆனால் பிரேசிலில் முதன் முறையாக நற்கருணை (First Communion) வாங்கிய சிறுவர்களுக்கு பாதிரியார் வித்தியாசமான முறையில் ஆசி வழங்கினார். ஆலயத்தின் பலிபீடத்திற்கு அருகே சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு இந்த வித்தியாசமான ஆசிர் வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் டெய்லி மெயில் வெளியிட்டிருந்த செய்தியை எடுத்து, கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக செய்தி வெளியிடும் ஊடகமான bishop-accountability.org என்ற ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில் இந்த தேவாலயம் பிரேசிலில் உள்ளது என்று தெரிவித்திருந்தனர். அவர்களும் கூட பிரேசிலில் இந்த வீடியோ எந்த தேவாலயத்தில் நடந்தது, அந்த பாதிரியார் யார் என்று குறிப்பிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: bishop-accountability.org I Archive 1 I friendlyatheist.patheos.com I Archive 2

அதே நேரத்தில் பாதிரியார் விளையாட்டாக அப்படிச் செய்தார், அந்த ஊர் கலாச்சாரத்திற்கு ஏற்ப இந்த சம்பவம் நடந்திருக்கலாம்… வித்தியாசமான முறையில் ஆசிர்வாதம் செய்த வீடியோ இது என்று சிலர் ஆதரவாகப் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. சம்பவம் சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் நாம் செல்லவில்லை. இந்த சம்பவம் இந்தியாவில் இந்து மாணவர்களுக்கு நடந்ததா இல்லையா என்று மட்டும் ஆய்வு செய்தோம். இந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில், நம்முடைய ஆய்வில் இந்த சம்பவம் 2016ம் ஆண்டு பிரேசிலில் நடந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்தவ பாதிரியாரால் இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரேசிலில் உள்ள தேவாலயத்தில் வித்தியாசமான முறையில் பாதிரியார் சிறுவர்களுக்கு ஆசி வழங்கிய வீடியோவை இந்தியாவில் இந்து மாணவர்களை மிஷனரிகள் நடத்தும் விதம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கிறிஸ்தவ பள்ளிகளில் இந்து மாணவர்களை அடிக்கும் பாதிரியார் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Misleading