
தென்னாப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்ற பெண் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் செய்தி ஊடகத்தில், “ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் – சாதனையா? வலியா?” என்ற தலைப்பில் செய்தி ஒன்று ஒளிபரப்பாகி இருந்தது. ஃபேஸ்புக்கில் 2021 செப்டம்பர் 23ம் தேதி அது பதிவிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில், “ஆப்ரிக்காவில் ஒரு பெண் 10 குழந்தைகளுக்கு அம்மா ஆகியிருக்கிறார். அதுவும் ஒரே பிரசவத்தில். இந்த செய்தி ஒரு வாரமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. உலக சாதனை, வைரல் என்பதைத் தாண்டி மருத்துவ ரீதியாக அந்த தாய் பட்ட கஷ்டம், இனி படப்போகும் பிரச்னைகள் பற்றி பேசப் போகிறேன்” என்று நிகழ்ச்சியை வழங்கும் நபர் கூறுகிறார். முழுக்க 10 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்ற அந்த பெண் பெற்ற கஷ்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தென்னாப்ரிக்காவில் 2021 ஜூன் மாதம் ஒரு பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பிறந்ததாகச் செய்திகள் வெளியாகின. உலகம் முழுக்க அந்த பெண் பற்றிய செய்திகள் வெளியாகின. தென்னாப்பிரிக்காவின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா என்ற கிராமத்தைச் சேர்ந்த கோஸியாமி சொடோலி என்ற பெண்ணுக்கு 10 குழந்தை பிறந்தது என்று பரபரப்பாக பேசப்பட்டது.

அசல் பதிவைக் காண: timesnownews.com I Archive 1 I bbc.com I Archive 2
அதன் பிறகு அந்த பெண்ணுக்கு 10 குழந்தை பிறந்ததது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அதற்கு பதில், அந்த பெண் காணாமல் போய்விட்டார், 10 குழந்தைகள் பிறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை என்று செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக, தென்னாப்பிரிக்காவின் கவ்டேங் மாகாண அரசும் அந்த பெண்ணுக்கு 10 குழந்தை பிறந்தது என்று வெளியான செய்தி உண்மையில்லை என்று உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் அது வெளியிட்டிருந்த அறிக்கை நமக்கு கிடைத்தது, அதில், “2021 ஜூன் 7ம் தேதி கவ்டேங் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக ஊடக செய்தி வெளியானது. இது தொடர்பாக மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததில் அப்படி எந்த ஒரு பிரசவமும் இந்த மாகாணத்தில் எங்கும் நிகழவில்லை என்று தெரியவந்தது.
ஜூன் 17ம் தேதி அந்த ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், கவ்டேங் மாகாணத்தின் ஸ்டீவ் பிகோ அகாடமிக் மருத்துவமனையில் பிரசவம் நிகழ்ந்தது என்றும், மருத்துவமனை மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள் மருத்துவ அலட்சியத்தை மறைக்க முயல்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவறானது, ஸ்டீவ் பிகோ அகடமிக் மருத்துவமனை மற்றும் மாகாண அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியாகி உள்ளது.
கவ்டேங் மாகாண சமூக மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த சமூக நலப் பணியாளர்கள் கோஸியாமி சொடோலியை அணுகி அவருக்கு உதவிகள் வழங்க தொடர்புகொண்டனர். அதன் அடிப்படையில் அவர் தெம்பிஸா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2021 ஜூன் 18ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 72 மணி நேர மருத்துவ கண்காணிப்பிலிருந்தார். அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் மேலும் ஏழு நாள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருந்த போது அந்த பெண்மணியின் உடல் நலம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டன. அதில், ‘’அந்த பெண்ணுக்குச் சமீபத்தில் குழந்தை பிரசவம் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் அந்த பெண்ணின் உடல் மற்றும் மன நலம் தொடர்பாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செய்தி வெளியிட்ட ஊடகத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க சட்டக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
அந்த பகுதி மேயர் உள்ளிட்டவர்களிடம் பிபிசி தரப்பில் பேசப்பட்டது. யாரும் பிரசவம் நடந்ததை உறுதி செய்யவில்லை. மேலும், யாரும் அந்த குழந்தைகளைக் கண்டதாகக் கூறவில்லை. இந்த செய்தியை வெளியிட்ட ஊடகமும் இதுவரை அந்த குழந்தைகள் எங்கே என்ற விவரத்தையோ, குழந்தைகள் படத்தையோ வெளியிடவில்லை.
சர்வதேச ஊடகங்கள் எல்லாம் கூட ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பிறந்த செய்தியை வெளியிட்டன. அதன் பிறகு உண்மை நிலை தெரிந்த பிறகு, நடந்தது என்ன என்பது பற்றி செய்தி வெளியிட்டுள்ளன. தமிழில் கூட முன்னணி ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. அந்த பெண்மணி கைது செய்யப்பட்டதாகவும் தமிழில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இது எதுவும் அறியாமல், தற்போது தென்னாப்ரிக்காவில் பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பிறந்தது போன்ற தகவலைப் பகிர்ந்துள்ளனர்.

அசல் பதிவைக் காண: samayam.com I Archive 1 I hindutamil.in I Archive 2
நம்முடைய ஆய்வில்,
தென்னாப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 10 குழந்தைகள் பிறந்ததாக செய்தி வெளியானதும், அது போலியான செய்தி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்கள் மாகாணத்தில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பிறந்ததாக எந்த பதிவும் இல்லை என்று கவ்டேங் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
அந்த பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதும் பிறகு பொய்யான செய்தியை பரப்பியதற்காகக் கைது செய்த செய்தியும் தமிழ் உள்ளிட்ட பல மொழி ஊடகங்களில் வெளியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தென்னாப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 10 குழந்தை பிறந்தது என்று பரவும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற பெண்- உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
