கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கூட்டமே இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

காலி நாற்காலிகளைப் பார்த்து பாஜக கன்னியாகுமரி வேட்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் பேசும் புகைப்படம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், " கன்னியாகுமாரியில் பாஜக வேட்பாளர் பொன்னார் தேர்தல் பரப்புரை.. அலைகடலென திரண்ட மக்கள்😂😂😂😂 இப்போ புரியுதா நாங்க ஏன் #NOTA_BJP என்று சொல்கிறோம் என்று" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் லைக்ஸ், ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரசாரம் என்று தீவிரமாக உள்ளன. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு உள்ள பகுதியான கன்னியாகுமரியிலேயே நடந்த தேர்தல் பிரசாரத்தில் மக்கள் வரவில்லை என்பது போன்று சமூக ஊடகங்களில் சிலர் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. வினவு என்ற இணையதளத்தில் இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்தது.

அதில், "நீட் தேர்வை ஆதரித்து பாஜக திருச்சியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் நாற்காலிகளைப் பார்த்து எழுச்சி உரையாற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: vinavu.com I Archive 1 I vinavu.com I Archive 2 I vikatan.com I Archive 3

இந்த தகவல் அடிப்படையில், கூகுளில் நீட் ஆதரவு மாநாடு, பாஜக, திருச்சி என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது விகடனில் வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது.

2017ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பதிவிடப்பட்டிருந்த அந்த செய்தியில், "கடந்த 8-ம் தேதி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திய அதே திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், மறுநாளான நேற்று இரவு பி.ஜே.பி கட்சி சார்பில் சந்தர்ப்பவாத கூட்டணியின் அவதூறு பிரசாரத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.

பின்குறிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேசி முடிப்பதற்குள் பாதிக்கூட்டம் காலியாகிப் போனது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் 2017ம் ஆண்டு திருச்சியில் நடந்த நீட் ஆதரவு பொதுக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2017ம் ஆண்டு திருச்சியில் நடந்த கூட்டத்தில் நாற்காலிகளை பார்த்து பொன் ராதாகிருஷ்ணன் பேசிய புகைப்படத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கன்னியாகுமரியில் பாஜக தேர்தல் பொதுக் கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False