திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்?- ஃபேஸ்புக் வதந்தி

Coronavirus சமூக ஊடகம் | Social சமூகம்

ஊரடங்கு காரணமாக சபரிமலை புகழ், கம்யூனிஸ்ட் ஏஜெண்ட் திருப்தி தேசாய் திருட்டுத் தனமாக மது வாங்கியபோது கைது செய்யப்பட்டார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

JayaPaul Balu என்பவர் 2020 ஏப்ரல் 2ம் தேதி 1.39 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

நிலைத் தகவலில், “சபரிமலை புகழ் கம்யூனிஸ்ட் ஏஜென்ட் திருப்த்தி தேசாய் ஊரடங்கு வேளையில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் வாங்கும்போது பிடிபட்டாள்!” என்று குறிப்பிட்டுள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோ பார்ப்பதற்கு பழைய வீடியோ போல உள்ளது. ஊரடங்கு நேரத்தில் போலீசார் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். ஆனால், இந்த வீடியோவில் உள்ள யாரும் மாஸ்க் அணிந்தது போல இல்லை. மேலும், சாலையில் கூட்டமாக மக்கள் நடமாட்டம் வேறு உள்ளது. ஒருவேளை, பழைய வீடியோ எதையேனும் எடுத்து புதிதுபோல பகிர்ந்திருக்கலாம் என தோன்றியது. 

வீடியோ தெளிவில்லாமல் இருப்பதால் கைது செய்யப்பட்டவர் திருப்தி தேசாய்தானா என்ற சந்தேகமும் எழுந்தது. எனவே, வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

ஆனால், அசல் வீடியோ, செய்தி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. திருப்தி சேதாய், சபரிமலை ஐயப்பன், மது ஆகிய கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். 

Archived LinkSearch Link

நம்முடைய தேடலில், பூனே மிரர் ஊடகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2019 செப்டம்பர் 14ம் தேதி வெளியிட்ட வீடியோ பதிவு மற்றும் சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் கிடைத்தன. அந்த ஆய்வுகளை ஒரங்கட்டிவிட்டு, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களைப் பார்த்தோம்.

புனே மிரர் வெளியிட்டிருந்த அந்த ட்விட்டர் பதிவில், மகாராஷ்டிராவை மது இல்லாத மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, (அப்போதைய) முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புனேவில் செல்ல இருந்த பாதையில் மது பாட்டல்களுடன் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்ட சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் கைது செய்யப்பட்டார்” என்று இருந்தது.

அந்த வீடியோ தெளிவாக இருந்தது. அதில் திருப்தி தேசாய் காலி மது பாட்டில்களைக் கொண்டு ஒரு மாலை தயாரித்திருப்பது தெரிந்தது.

தொடர்ந்து தேடியபோது டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. செப்டம்பர் 15, 2019ம் தேதி வெளியான அந்த செய்தியிலும் மேற்கண்ட செய்தியை குறிப்பிட்டிருந்தனர்.

அதில், திருப்தி தேசாய் முதல்வருக்கு காலி பாட்டில் மாலை அணிவிக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

timesofindia.indiatimes.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

ஊரடங்கின்போது மது பாட்டில் வாங்கியதாக கைது செய்யப்பட்ட திருப்தி தேசாய் என்று பகிரப்படும் வீடியோ 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

மது வாங்கியதற்காக அவர் கைது செய்யப்படவில்லை, மது இல்லாத மகாராஷ்டிரம் என்று அறிவிக்க வலியுறுத்தி போராடியபோது கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஊரடங்கு நேரத்தில் மது பாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் கம்யூனிஸ்ட் ஏஜென்ட் திருப்தி தேசாய் கைது செய்யப்பட்டார், என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்?- ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்?- ஃபேஸ்புக் வதந்தி

  1. ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு பொய்யை தேசத்துக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் கடடவிழ்த்து விடறாங்களே! அவங்களை ஏன்னு கேக்க துப்பில்லை. இந்து பக்கங்களில் உண்மையான கழிசடைகளை பத்தி ஓரிரு மாறுபடட தகவல்கள் வந்தா மட்டும் இப்படி துருவி ஆராயிறீங்களே, உங்களுக்கெல்லாம் தேசப்பற்றே கிடையாதா? உப்பு போட்டுத்தான் சாப்பிடுறீங்களா?

Comments are closed.