வட இந்தியாவில் தேர்தலுக்கு முன்பாக மோடியின் உருவ பொம்மையை பாடையில் ஏற்றி பொது மக்கள் ஊர்வலம் சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை பாடையில் வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "வட இந்தியாவில்....*🤔 *தேர்தலுக்கு முன்னாடியே மோடியை பாடையில ஏத்திட்டானுங்க" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியாவிலும் கூட மோடிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் என்ற கருத்தைப் பரப்பும் வகையில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் பிரதமர் மோடி, ஹரியானா முன்னாள் முதல்வர் கட்டாரியா ஆகியோர் பெயர் சொல்லப்படுவதால் இது வட இந்தியாவில் எடுக்கப்பட்டது என்றே தோன்றியது. அதே நேரத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2017ம் ஆண்டிலிருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். பாகிஸ்தானில் இப்படி செய்யப்பட்டது என்று சிலர் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதே நேரத்தில் நம்பகமான செய்தி ஊடகங்களில் வெளியான பதிவு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஒரு இந்தி ஊடகத்தில் இந்த வீடியோ காட்சியின் புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பதை காண முடிந்தது. ஆனால், அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இப்படி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது நக்கீரன் வெளியிட்டிருந்த யூடியூப் வீடியோவின் Thumbnails புகைப்படமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒத்துப்போனது. எனவே குழப்பத்துடன் ஆய்வைத் தொடர்ந்தோம். ஆனால் எந்த உறுதியான முடிவும் நமக்கு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில், பாகிஸ்தான் மற்றும் ஹரியானாவில் மோடியின் உருவ பொம்மையைப் பாடையில் எடுத்துச் சென்றதாகப் பரவிய வதந்தி தொடர்பாக சில ஃபேக்ட் செக் ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகளும் நமக்குக் கிடைத்தன. அதில் இந்தி யூடியூப் சேனல் ஒன்றில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நரேந்திர மோடிக்கு மாதிரி இறுதிச்சடங்கு காட்சிகள் நிகழ்த்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீடியோ தற்போது அகற்றப்பட்டுவிட்டது.

மேலும், ஹரியானாவில் நடந்த வேறு ஒரு போராட்டத்தின் வீடியோவில் இருந்த மோடி, கட்டாரியாவுக்கு எதிராக எழுப்பப்பட்ட கோஷத்தின் ஆடியோவை மட்டும் எடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீடியோவுடன் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பதாகவும் அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோஷம் வீடியோ நமக்கும் கிடைத்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீடியோ என்று குறிப்பிட்டதால் சென்னையில் அது எங்கு எடுக்கப்பட்டது என்று இடத்தை வைத்து ஒப்பீடு செய்ய ஆய்வைத் தொடர்ந்தோம். இந்த இடம் எங்கு உள்ளது என்று தேடினோம். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இந்த இடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே, காமராஜர் சாலையுடன் இணைப்பு சாலை ஏதாவது ஒன்றில் நடந்திருக்கலாம் என்று ஒவ்வொரு சாலையின் கூகுள் மேப் படத்தை ஆய்வு செய்தோம். அப்போது திருவல்லிக்கேணி அருகே பெசன்ட் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளி வாசல் பகுதியுடன் இந்த வீடியோவில் உள்ள காட்சி ஒத்துப்போனது.

லேடி வெலிங்டன் பள்ளியின் மதில் சுவரும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள கட்டிடத்தின் சுவரும் ஒன்றாக இருப்பதைப் பழைய படங்கள் உறுதி செய்தன. இதன் மூலம் இந்த பாடை வீடியோ 2017ல் சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

Google Map

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் (நாடாளுமன்ற) தேர்தலுக்கு முன்பாகவே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பாடையை வட இந்திய மக்கள் எடுத்துச் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வீடியோ 2017ல் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது நம்முடைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வீடியோ 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதும் 2017 சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீடியோவை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக வட இந்தியாவில் போராட்டம் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘வட இந்தியாவில் நரேந்திர மோடிக்கு பாடை கட்டிய மக்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False