
தி.மு.க ஆட்சியில் ஒருவர் மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று வர தனக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “உள்ளூரில் கடை இல்லாததால் டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும் – குடிமகன் கலெக்டரிடம் மனு” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “திராவிட மாடல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Padma Paramakrishnan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
திராவிட மாடல் ஆட்சியில், தி.மு.க ஆட்சியில் டாஸ்மாக் கடைக்கு செல்ல இலவச பஸ் பாஸ் கேட்டு கலெக்டரிடம் ஒருவர் மனு கொடுத்தார் என்று சமூக ஊடகங்களில் அதிமுக மற்றும் பாஜக-வினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த செய்தி தற்போது வெளியானதா என்று பார்த்தோம்.
செய்தியின் தலைப்பை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்த செய்தியை ஏஷியா நெட் என்ற இணையதள ஊடகம் 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதுவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே கேட்டது போன்று தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், உள்ளே விவசாயி கோரிக்கை மனு என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த செய்தி தி.மு.க ஆட்சியில் நடந்ததாக இருக்கலாம் என்று முதலில் தெரிந்தது. தொடர்ந்து தேடிய போது, இதே செய்தியை 2018ம் ஆண்டில் தினகரன் வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால், அந்த செய்தியில் படங்கள் எதுவும் இல்லை. ஆனால், ஈரோட்டைச் சார்ந்த செங்கோட்டையன் என்பவர் தன் ஊரில் டாஸ்மாக் கடை இல்லாததால் வெளியூர் சென்று மது அருந்த வேண்டியுள்ளது. போக்குவரத்துக்குக் கூடுதல் செலவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: asianetnews.com I Archive
எனவே, தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று கூறியிருந்தார். இந்த செய்தி 2018 டிசம்பர் 4ம் தேதி வெளியாகி இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தினகரன் நாளிதழ் செய்தியும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகி இருந்தது. எனவே, இது 2018ம் ஆண்டு செய்தியாக இருக்கலாம் என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: dinakaran.com I Archive
இதை உறுதி செய்துகொள்ள வேறு ஏதும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். அப்போது, தந்தி டிவி 2018 டிசம்பர் 4ம் தேதி வெளியிட்டிருந்த வீடியோ கிடைத்தது. அதில், தங்கள் ஊரில் முடியிருக்கும் டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும் அல்லது பக்கத்து ஊருக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று செங்கோட்டையன் என்ற விவசாயி கலெக்டரிடம் இன்று மனு அளித்தார் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த செய்தி 2018ம் ஆண்டு வெளியானது என்பது உறுதியானது.
2018ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் இல்லை. அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வந்தது. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த நிகழ்ச்சியை தி.மு.க ஆட்சியில் நடந்தது போன்று தவறாக குறிப்பிட்டுப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைக்கு செல்ல பஸ் பாஸ் கேட்ட விவசாயி என்று பரவும் செய்தி 2018ல் வெளியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:டாஸ்மாக் கடை செல்ல இலவச பஸ் பாஸ் கேட்ட விவசாயி; 2018 செய்தியை தற்போது பரப்பும் நெட்டிசன்கள்!
Fact Check By: Chendur PandianResult: False
