குஷ்பூ மற்றும் அவரது சகோதரர் பற்றி பகிரப்படும் விஷமத்தனமான வதந்தி…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’குஷ்பூ மீது ஊடகங்கள் முன்னிலையில் கை வைத்து தடவும் பாஜகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல்களை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

அக்டோபர் 12, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், நடிகை குஷ்பூ பாஜகவில் இணையும் நிகழ்வின்போது, அவரது தோளில் ஆண் ஒருவர் கை போட்டு நிற்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’லைவ்லயே இப்படின்னா மற்ற நேரம் என்ன எல்லாம் நடந்திருக்கும்,’’ என விமர்சித்து எழுதியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை வைத்து பலரும் ‘’ஊடக வெளிச்சத்திலேயே அத்துமீறும் பாஜகவினர்,’’ எனக் கூறி தகவல் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
நடிகை குஷ்பூ அரசியலில் ஆர்வம் கொண்டவர் ஆவார். இதன்பேரில், திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்த அவர், பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவி தரப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் திடீரென பாஜகவில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

குஷ்பூ பாஜகவில் இணைந்தது பற்றி சமூக வலைதளங்களில் அக்டோபர் 12ம் தேதியன்று காரசாரமான விமர்சனங்கள், கேலி கிண்டல் செய்யும் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. அதில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட புகைப்படம் பற்றிய தகவலும்.

ஆனால், உண்மையில் இது முற்றிலும் விஷமத்தனமான செயலாகும். ஏனெனில், குஷ்பூவுக்கு ஆலோசனை சொல்லும் வகையில், அவரது உடன்பிறந்த சகோதரர் அப்துல்லா அவரது தோள் மீது கை வைத்து பேசிய புகைப்படம்தான் அது.

இதனை புரிந்துகொள்ளாமல் பலரும், பாஜகவினர் பட்டப் பகலிலேயே குஷ்பூவிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகக் கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

குஷ்பூ பாஜகவில் இணையும் நிகழ்வு டெல்லியில் நிகழ்ந்தது. அவருடன் பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவண குமரன் ஆகியோரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இவர்கள் 3 பேருமே குறிப்பிட்ட புகைப்படம் எடுக்கப்பட்ட அரங்கில்தான் சில மணி நேரம் பாஜகவினர் மற்றும் ஊடகத்தினருடன் இருந்தனர்.

ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது…

Archived Link

இதன்படி, இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து குஷ்பூ பேசினார். அதில்தான் மேற்கண்ட காட்சியும் நடந்தது. அந்த வீடியோ லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

இந்த வீடியோவின் இறுதிக்கட்டத்தில் குஷ்பூவின் சகோதரர் அவரின் அருகே வந்து, அவரது தோளை தொட்டு எச்சரிக்கையூட்டும் வகையில் காதோரம் பேசுவதை நீங்கள் காணலாம். 

இதைச் சரியாக புரிந்துகொள்ளாமல், பலர் பாஜகவினர் இப்படி குஷ்புவிடம் முறைகேடாக நடந்துகொண்டாக தகவல் பரப்பி வருகின்றனர்.

இந்நிகழ்வின்போது குஷ்பூ உடன் அதே அரங்கில் இருந்த மதன் ரவிச்சந்திரனிடம் நமது நண்பர்கள் உதவியுடன் இதுபற்றி விசாரித்தோம். அப்போது அவர், ‘’இதில் இருப்பவர் குஷ்பூவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். அண்ணன் – தங்கை பற்றி இவ்வளவு தரக்குறைவான தகவல் பகிர்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்கு நன்றாக தெரியும்,’’ என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் இதுபற்றி ட்விட்டரிலும் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link 

இவரை தவிர, நாம் அன்றைய நிகழ்வில் பங்கேற்ற இதர சில பெயர் வெளியிட விரும்பாத பாஜகவினரையும் தொடர்பு கொண்டு விசாரித்தோம். பாஜக ஐடி பிரிவிலும் கேட்டோம். அனைவருமே, ‘’இதில் இருப்பவர் குஷ்பூவின் சகோதரர்தான். அவர் இதனை பார்த்தால் மிகவும் வேதனைப்படுவார்,’’ எனக் குறிப்பிட்டனர்.

இதுபற்றி சந்தேகம் இருந்தால் கூகுளில் கூட நமது வாசகர்கள் தகவல் தேடிப் பார்க்கலாம். குஷ்பூ அடிப்படையில் இஸ்லாமியர் ஆவார். நடிக்க வந்த பின் தனது பெயரை மாற்றிக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் பெயர் அப்துல்லா. அவர்தான் இந்த புகைப்பட சர்ச்சையில் சிக்கியவர் ஆவார்.

அப்துல்லா தொடர்பான காணொலி ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) குறிப்பிட்ட புகைப்படத்தில் குஷ்பூ தோள் மீது கை வைத்து நிற்பவர் அவரது உடன்பிறந்த சகோதரர்தான்.

2) உண்மைத்தன்மை புரியாமல் குஷ்பூவிடம் பாஜகவினர் பட்டப் பகலில் அத்துமீறுவதாகக் கூறி வதந்தி பரப்பி வருகின்றனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:குஷ்பூ மற்றும் அவரது சகோதரர் பற்றி பகிரப்படும் விஷமத்தனமான வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False