
ரஷ்யக் கொடியுடன் வந்த எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதற்கு பதிலடியாக, ஏவுகணை மூலம் அமெரிக்காவை அச்சுறுத்திய ரஷ்யா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டேங்கர் கப்பல் கைப்பற்றப்பட்டதற்குப் பதிலடியாக, ரஷ்யா அமெரிக்காவை ஏவுகணைத் தாக்குதல் மூலம் அச்சுறுத்துகிறது, “ஒரு இராணுவப் பதில் நடவடிக்கை அவசியம்: டார்பிடோக்களால் தாக்குதல் நடத்தி, பல அமெரிக்கக் கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும்,” — என்று ரஷ்யாவின் ஸ்டேட் டுமா உறுப்பினரான ‘அலெக்ஸி ஜுராவ்லியோவ்” கூறினார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதற்கு பதிலடியாக, ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது போன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, பழைய வீடியோவை புதிது போன்று பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2018ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலை தூர ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது, 2018ம் ஆண்டு மே மாதம் ரஷ்யா ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை நடத்தியதாக செய்திகளும் கிடைத்தன. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்றிருந்த காட்சியின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படத்தையும் வைத்திருந்தனர். இதன் மூலம் எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதற்கு பதிலடியாக ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் என்று பரவும் வீடியோ மற்றும் தகவல் தவறானது என்று உறுதியானது.
முடிவு:
2018ம் ஆண்டு ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை சோதனை வீடியோவை, ரஷ்ய கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்காவுக்கு ஏவுகணைத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்த ரஷ்யா என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading


