
பிரான்சில் தற்போதைய நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அல்ஜீரியா கொடியுடன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்சில் பாரிசின் தற்போதைய நிலை. அங்கு தொடா்ந்து மோதல் நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை இந்திய இராணுவச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூலை 5ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரான்சில் 17 வயது இளைஞரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு கொன்றதைத் தொடர்ந்து அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. வன்முறையாளர்கள் தொடர்ந்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு தொடர்ந்து கலவரம், மோதல் நிலவி வருகிறது என்று சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. போராட்டத்தின் வீடியோவை பகிர்ந்து மோதல் நிலவுகிறது என்று குறிப்பிட்டிருந்ததால் இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டு மே 10ம் தேதி AFP News Agency நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதை போன்று ஒரு வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தது தெரிந்தது. அதில், “அல்ஜீரியா அதிபராக ஐந்தாவது முறையாக அப்தலசீஸ் பூத்தஃபீலிகா (Abdelaziz Bouteflika) பதவியேற்பதைக் கண்டித்து பாரீஸில் அல்ஜீரியா கொடியுடன் அந்நாட்டினர் போராட்டம் நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளவர்கள் கைகளிலும் அல்ஜீரியா கொடி உள்ளது. எனவே, இரண்டு வீடியோவும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: voanews.com I Archive
அல்ஜீரியா அதிபர், பாரீஸ் போராட்டம் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். வீடியோவில் உள்ள காட்சிகளுடன் 2019ல் வெளியான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில் உடல் நலக் குறைவுற்ற அப்தலசீஸ் மீண்டும் அதிபராக பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதாகவும் அல்ஜீரியா மட்டுமின்றி பிரான்சிலும் போராட்டங்கள் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாரிஸ் நகரத்தில் உள்ள ப்ளேஸ் டி லா ரிபப்ளிக்கில் நடந்த போராட்டத்தில் சுமார் 6,000 பேர் கலந்துகொண்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பாரீஸ் நகரில் எடுக்கப்பட்டதுதான். ஆனால். 2023ல் இல்லை, 2019ல் அல்ஜீரிய அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது. 2023 ஜூனில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்துக்கும் இந்த வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிரான்சில் நிகழும் மோதல் என்று பரவும் வீடியோ 2019ம் ஆண்டு அல்ஜரிய அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பிரான்சில் தொடரும் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
