மோடி எம்.ஏ., படித்ததாகச் சொல்வது பொய் என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பிரதமர் மோடி எம்.ஏ டிகிரி படித்ததாக சொல்வது பொய் என அண்ணாமலை கூறினார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

“என்ன வாய்டா இது..?” என குறிப்பிட்டு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் இரண்டை வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாடு அமைச்சர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியாது.. டெல்லி சென்று எப்படி நிதியை பெற்று வருவார்கள்?” என்றும் “கர்ம வீரர் காமராஜர் படிக்காதவர்.. நமது பாரதப் பிரதமர் படிக்காதர்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மோடி M.A டிகிரி படித்ததாகச் சொல்வது பொய் – அண்ணாமலை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Dmk It Wing Dc Bala Krishnan mdu city south என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மோடி எம்.ஏ படித்ததாக பொய் சொன்னார் என அண்ணாமலை கூறியதாக பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை படிக்காத மேதை என்று அண்ணாமலை கூறியிருந்தார். மோடி எம்.ஏ படித்ததாக பொய்தான் சொன்னார் என எங்காவது குறிப்பிட்டாரா என அறிய ஆய்வு செய்தோம்.

மோடி எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார், அவர் 62.3 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்வில் வெற்றி பெற்றதாக குஜராத் பல்கலைக்கழக துணை வேந்தர் முன்பு அறிவித்திருந்தார். இந்த சூழலில் மோடி எம்.ஏ படித்ததாக பொய் சொன்னார் என அண்ணாமலை எங்காவது குறிப்பிட்டாரா என்று பார்த்தோம். ஆனால், அப்படி அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

பா.ஜ.க கூட்டத்தில் அண்ணாமலை பேசியதை தேடினோம். தமிழ்நாடு பாஜக ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோ இருந்தது. வீடியோவின் 10.22வது நிமிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் படிப்பு தொடர்பாக அண்ணாமலை பேசினார். டிஜிட்டல் பண பரிமாற்றத்தை கொண்டு வந்த போது, நாடாளுமன்றத்தில் பி.சிதம்பரம் சொன்னார், “ஐயோ என்ன படிக்காதவங்கதான் இந்தியாவுல அதிகமா இருக்கிறாங்க. டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொண்டு வந்தா அவங்களுக்கு எல்லாம் தெரியாதுங்க. அவங்க எல்லாம் படிக்காதவங்க. இங்கே கர்மவீரர் காமராஜர் அவர்கள் படிக்காதவர் தான். பாரத பிரதமர் நரேந்திர மோடி படிக்காதவர் தான். ஆனால் இன்னைக்கு நம்முடைய அந்த படிக்காத மேதை நரேந்திர மோடி அவர்கள் டெல்லியிலிருந்து செய்திருக்கக் கூடிய சாதனையை பாருங்க” என்கிறார். எந்த இடத்திலும் பிரதமர் மோடி எம்.ஏ படித்ததாக சொல்வது பொய் என்று கூறவில்லை. 

Archive

பிரதமர் மோடி படிக்காதவர் என்று மட்டுமே அண்ணாமலை கூறினார். அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கப்படலாம். அண்ணாமலை கூறிய கருத்தின் அடிப்படையில் நாம் ஆயிரம் விதமாக புரிந்துகொள்ளலாம். ஆனால் அண்ணாமலையிடமிருந்து மோடி எம்.ஏ டிகிரி படித்ததாக சொல்வது பொய் என்று வரவில்லை. படிக்காத மேதை என்று சொன்னதை விஷமத்தனமாக மாற்றி மோடி டிகிரி படித்ததாக சொல்வது பொய் என அண்ணாமலை கூறிவிட்டார் என்று பகிர்ந்துள்ளனர். இது தவறான புரிதலை ஏற்படுத்துவதால் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

அண்ணாமலை கூறியது போன்று மோடி படிக்காதவரா என்று பார்த்தோம். பிரதமர் மோடி தான் டெல்லி பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்ததாகவும் குஜராத் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்ததாகவும் தன்னுடைய தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து உண்மையில் மோடி படித்தாரா என்ற சர்ச்சை எழுந்தது. 

உண்மைப் பதிவைக் காண: samayam.com I Archive

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை முன்னாள் நிதியமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி மற்றும் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து மோடியின் படிப்பு தொடர்பான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 1983ம் ஆண்டு அவர் எம்.பி படித்து முடித்தார் என குஜராத் பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். 

உண்மைப் பதிவைக் காண: economictimes.indiatimes.com I Archive

இந்த படிப்புகள் மற்றும் சான்றிதழ்களின் நம்பகத்தன்மை தொடர்பாக சிலர் கேள்வி எழுப்பினர். அது வேறு பிரச்னை. மோடி படித்தது உண்மை என்று குஜராத் பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுவிட்டது. அதன் அடிப்படையில் பார்த்தால் மோடி படிக்காதவர் அல்ல.

முடிவு:

மோடி எம்.ஏ படித்ததாக சொல்வது பொய் என அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடி எம்.ஏ., படித்ததாகச் சொல்வது பொய் என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “மோடி எம்.ஏ., படித்ததாகச் சொல்வது பொய் என்று அண்ணாமலை கூறினாரா?

  1. Mem also say not educated and it didn’t say about ma. Please have some ethical fact checkers

Comments are closed.