
‘’பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

கடந்த சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் மேற்கண்ட வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதனை, ‘’இதோ இப்போது பீகார் தேர்தலில் ⚖️🐘 யானை சின்னத்தில் பொத்தானை அழுத்தினால் தாமரை சின்னத்தில் பதிவாகும் காட்சி,’’ என்ற தலைப்புடன் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Screenshot: Various FB Posts with same caption
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் பெண் ஒருவர் யானை சின்னத்தில் கை வைத்து அழுத்துவது போலவும், ஆனால், தாமரை சின்னத்தில் சிவப்பு விளக்கு எரிவது போலவும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை வைத்தே பலரும், பீகார் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு விட்டதாக, தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்று நமக்கு தெளிவாகிறது.
ஆனால், இந்த வீடியோவை பலரும் மேலோட்டமாக பார்த்துவிட்டு, மற்றவர்களுக்கும் தகவல் பகிர்கிறார்கள் என்று இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
உண்மையில், இதில் உள்ள காட்சிகளை நன்கு கவனித்தால், ஒரு உண்மை தெரியவரும். அதாவது, குறிப்பிட்ட பெண், ஒரே சமயத்தில் 2 விரல்களை அசைக்கிறார். அதில், ஒரு விரல் மட்டும் சரியாக தாமரை சின்னத்திற்கு நேராக உள்ள பொத்தானில் படுகிறது, உடனே சிவப்பு விளக்கு எரிகிறது. பிறகு, அப்படியே விரலை அசைக்காமல் கையை அகற்றிக் கொள்கிறார். அதனை நாம் கீழே விளக்கத்திற்காக, வட்டமிட்டு காட்டியுள்ளோம்.


எனவே, வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு எதுவும் இல்லை; இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என்றும், இதனை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட நபரே பகிர்ந்துள்ளார் என்றும் நமக்கு தெளிவாகிறது.
இதற்கடுத்தப்படியாக, இந்த வீடியோ உண்மையில், தற்போது நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தல் 2020 உடன் தொடர்புடையதா அல்லது வேறு நிகழ்வுடன் தொடர்புடையதா என்ற கோணத்திலும் தகவல் தேட தொடங்கினோம்.
இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து வைத்து ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது, நமக்கு 2019ம் ஆண்டு மே மாதத்தில் இதே வீடியோவை சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது.

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவுகளின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபேஸ்புக் பதிவுகளிலும், ‘’யானை சின்னத்தில் பட்டன் அழுத்தினால், தாமரை சின்னத்தில் வாக்கு பதிவாகிறது,’’ என்றே குறிப்பிட்டுள்ளனர். எனவே, 2019ம் ஆண்டு முதலே இந்த வீடியோ பகிரப்பட்டு வருவதாக, தெரிகிறது.
கூடுதல் தகவல் தேடியபோது, 2019 ஏப்ரல் 11 முதல் மே 23 தேதி வரை இந்தியா முழுக்க 7 கட்டங்களாக, நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த காலக்கட்டத்தில்தான், இந்த வீடியோவும் எடுக்கப்பட்டதாக, தெரிகிறது.
இதுபற்றி அப்போதே, ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள Basti பகுதியில் நடந்ததாக, தெரிகிறது. இதுபற்றிய செய்தி லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, விஷ்வாஸ் ஊடகத்தினர் இந்த வீடியோ பற்றி பஸ்தி பகுதியின் தேர்தல் அதிகாரி அருண் குமார் சிங்கிடம் விளக்கம் கேட்டு, அதனைச் செய்தியாக வெளியிட்டுள்ளனர். இதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,
1) குறிப்பிட்ட வீடியோ 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, உத்தரப் பிரதேசம் மாநிலம், பஸ்டியில் எடுக்கப்பட்டதாக, தெரிகிறது. இந்த வீடியோ அப்போது இருந்தே சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
2) இதற்கும் தற்போது நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் போலியான ஒன்று என ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர மோசடி?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
