
உக்ரைனில் பிரிட்டிஷ் சரக்கு கப்பல்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனான் நாட்டில் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உக்ரைனின் ஒடெசா துறைமுகம், தரைக்குக் கீழே இருந்த இரண்டு பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்களைத் தாக்கிய நான்கு ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டது, ஒரு பெரிய வெடிப்பைத் தூண்டியது. உக்ரைனுக்கு உயர் வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லும் பிரித்தானியக் கப்பல்கள்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Alilmnews என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஆகஸ்ட் 3ம் தேதி பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து விபத்துக்குள்ளானது. அந்த வீடியோவை எடுத்து உக்ரைனில் ஆயுதங்களை ஏற்றிவந்த பிரிட்டிஷ் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டு சிலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பெய்ரூட்டில் பதிவானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் உள்ளிட்ட ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2020ம் ஆண்டு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது இதே வீடியோவை வைத்து வதந்தி பரப்பப்பட்டது. அப்போது இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
2020 ஆகஸ்ட் 4ம் தேதி பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோக்களில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்து ஏற்பட்ட காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ உக்ரைனில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனானில் ஏற்பட்ட வெடி விபத்தின் வீடியோவை உக்ரைனில் நிகழ்ந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உக்ரைனில் பிரிட்டிஷ் கப்பல்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
