இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டும்! – சுந்தர் பிச்சை அட்வைஸ் செய்தாரா?

சமூக ஊடகம் சமூகம்

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

SUNDER 2.png

Facebook Link I Archived Link

நாளிதழ் ஏதோ ஒன்றில் வெளியான செய்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல! கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை கருத்து” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.

The Verve World news என்ற நிறுவனம் சுந்தர் பிச்சை கூறியதாக ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியை அதில் ஆதாரமாக அளித்துள்ளனர். இந்த செய்தியை எந்த ஊடகம் வெளியிட்டது என்று தெரியவில்லை. அதில் தேதி, பத்திரிகையின் பெயர் எதுவும் இல்லை. 

இந்த பதிவை, Mekubukhan Hussiankhan என்பவர் செப்டம்பர் 2, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த ஐஐடி-யில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது மாணவர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டதாகவும் அதற்கு சுந்தர் பிச்சை, எனக்கு இந்தி தெரியாது என்று கூறியதாக ஒரு செய்தி கிளம்பியது. பிறகு மாட்டிறைச்சி பற்றியும் நீட் தேர்வு பற்றியும் அவர் கருத்து கூறியதாக செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன. அதை தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் கட்டுரைகளை வௌியிட்டு இருந்தது.

அந்த வகையில் தற்போது இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று அவர் கூறியதாக தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

கூகுள் சி.இ.ஓ எந்த ஒரு கருத்தை தெரிவித்தாலும் அது உலகம் முழுக்க எல்லா ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகும். அப்படி இருக்கும்போது இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி குறிப்பாக மதம் பற்றி பேசியிருந்தால் அது நாடு முழுக்க மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆகியிருக்கும். எனவே, The Verve என்ற ஊடகத்தில் சுந்தர் பிச்சை பேசியது உண்மையா என்று கூகுளில் தேடினோம். சுந்தர் பிச்சை பெயரில் பரவி வரும் வதந்திகள் பற்றிய தகவல் மட்டுமே கிடைத்தது.

SUNDER 3.png

சரி, Verve என்ற இதழில் சுந்தர் பிச்சை பற்றி ஏதாவது வந்துள்ளதா என்று தேடினோம். சுந்தர் பிச்சை பெயரில் எந்த ஒரு கட்டுரையும் அந்த தளத்தில் இருந்து நமக்கு கிடைக்கவில்லை. தமிழக காவல்துறையின் உயர் அதிகாரியாக பதவி வகித்த அர்ச்சனா சுந்தரம் பற்றி எல்லாம் கட்டுரை கிடைத்தது, சுந்தர் பிச்சை பற்றிய கட்டுரை எதுவும் கிடைக்கவில்லை.

SUNDER 3A.png

ஆங்கிலத்தில் Sundar Pichai என்றுதான் அவருடைய பெயர் எழுதப்படுகிறது. ஆனால், மேற்கண்ட பதிவில் உள்ள பெயரில் கூடுதலாக ஒரு ‘t’ (Pitchai) இருந்தது. இவை எல்லாம் இந்த தகவல் போலியானதாக இருக்கலாம் என்று உணர்த்தியது.

SUNDER 4.png

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஆங்கிலத்தில் உள்ள பதிவு நமக்கு கிடைத்தது. 2017ம் ஆண்டில் இருந்து பலரும் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது தெரிந்தது. அதில் சுந்தர் பிச்சை கூறியது என்ற பகுதியை அப்படியே டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது சுந்தர் பிச்சை பெயரில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் போலி செய்திகள் மற்றும் அது தொடர்பான உண்மை கட்டுரைகள் மட்டுமே கிடைத்தன.

SUNDER 5.png

அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றுள்ள The Varve நியூஸ் கார்டு பற்றிய கட்டுரையும் கிடைத்தது. அதை படித்துப் பார்த்தபோது, பெயர் வெளியிட விரும்பாத கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் பேசியதாகவும், அப்போது அவர், இது முற்றிலும் போலியானது என்று உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

நம்முடைய ஆய்வில்,

இந்திய அரசியல் சூழ்நிலையில் பற்றி சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

The Varve இதழில் சுந்தர் பிச்சை பற்றி தேடிய போது எந்த கட்டுரையும் கிடைக்கவில்லை.

சுந்தர் பிச்சையின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளது. 

இந்த தகவல் போலியானது என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறிய தகவல் கிடைத்துள்ளது.

2017ம் ஆண்டில் இருந்து இந்த வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல!” என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக வெளியான தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டும்! – சுந்தர் பிச்சை அட்வைஸ் செய்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False