டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க ஒரு விவசாயி தன்னுடைய ரூ.2.55 கோடி மதிப்பிலான காரில் வந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கார் ஒன்றின் மீது சீக்கியர் ஒருவர் அமர்ந்த செய்தித்தாள் படிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இவர்கள் தான் ஏழை விவசாயிகள் எலக்சன் வந்தால் போதும் உடனே டில்லி கிளம்பிருவானுக போராட்டம் என்ற போர்வையில் காங்கிரஸ்க்கும் ஆம் ஆத்மி க்கும் சப்போட் பன்ன திருட்டு புரோக்கர் நாய்க அவர்கள் அமர்ந்து இருக்கும் காரின் விலை 2.55 கோடி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்துடன் கூடிய பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்களில் வந்து போராடும் இவர்கள் ஏழை விவசாயிகளா என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் 2024 டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டது இல்லை. 2020ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.

இது தொடர்பாக 2020ம் ஆண்டிலேயே வதந்தி பரவியது. அப்போது இந்த கார் பல கோடி மதிப்பிலானது இல்லை; சில லட்ச ரூபாய் மதிப்பிலான ஒன்றுதான் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அசல் பதிவைக் காண: instagram.com I Archive

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் வாகனம் தொடர்பாக தேடினோம். 2020ம் ஆண்டு அந்த நபர் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவு நமக்கு கிடைத்தது. அதில் அந்த வாகனத்தின் பதிவு எண் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் தேடிய போது, இந்த வாகனம் பென்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. ஃபோர்ட் நிறுவனம் தயாரித்த GURKHA FM2.6CR-4X2 HARD TOP என்ற வாகனத்தை பென்ஸ் கார் போல அந்த நபர் மாற்றியமைத்துள்ளார்.

அந்த காரின் விலை அன்றைய சந்தை மதிப்பில் ரூ.9.99 லட்சத்திலிருந்து ரூ.13.3 லட்சம் வரைதான். அதை அவர் பென்ஸ் கார் போல மாற்றியமைக்க இன்னும் கூடுதலாக சில லட்சங்களைச் செலவு செய்திருக்கலாம். அதற்காக இரண்டு கோடி அளவுக்கு எல்லாம் அதன் மதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை. சில லட்சங்களில் இதை மெர்சிடிஸ் வாகனம் போல மாற்ற முடியும் என்ற தகவல் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: news18.com I Archive

அந்த காரின் உரிமையாளர் உண்மையில் விவசாயியும் இல்லை. அவர் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க அந்த போராட்டத்தில் பங்கேற்றவர் மட்டுமே. "இந்த வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனை போல் வடிவமைக்கப்பட்ட வாகனம். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் ஒழுங்காக வரி கட்டி வருகிறேன். விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்த என்னுடைய வாகனத்தின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதை நினைத்து வருந்துகிறேன்" என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

இதன் மூலம் 2020ம் ஆண்டு படத்தை எடுத்து, 2024 விவசாயிகள் போராட்டத்தில் 2.55 கோடி ரூபாய் காருடன் பங்கேற்ற விவசாயி என்று தவறாக பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பல கோடி மதிப்பிலான பென்ஸ் காருடன் போராட்டத்தில் பங்கேற்ற ஏழை விவசாயி என்று பரவும் பதிவு விஷமத்தனமானது... அந்த நபர் விவசாயி இல்லை, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர் என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:RAPID FACT CHECK: போராட்டத்தில் பங்கேற்க ரூ.2.55 கோடி காரில் வந்த விவசாயி என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False