விவசாயிகள் போராட்டத்தில் ரூ.2 கோடி மதிப்புடைய வாகனத்துடன் பங்கேற்ற நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஜீப் வகை வாகனத்தின் மீது அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் சீக்கியர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "டேய் Mercedes G wagonஐ கொண்டாந்து நிறுத்தி கார்பரேட்டை எதிர்ப்பது எல்லாம் வேற லெவல்ல போறிங்க டா.. அந்த வண்டியின் தோராய விலை ₹2 கோடி.. அதுவும் அதுமேல உக்காந்து பேப்பர் படிக்குறதுலாம் கார் கம்பெனி ஓனரால கூட முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Kongu Venkat Bjp என்பவர் 2020 டிசம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த தகவலை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விவசாயி என்றால் கோமணம் மட்டுமே கட்டக் கூடிய நபராக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலுடன் பலரும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளை விமர்சித்து வருகின்றனர். விவசாயிகள் பீட்சா சாப்பிடுகிறார்கள், படம் பார்க்கிறார்கள், சொகுசாக வாழ்கிறார்கள் என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2 கோடி ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ் ஜி வேகன் வாகனத்துடன் போராட்டத்தில் ஒருவர் பங்கேற்றுள்ளார் என்று பகிரப்பட்டுள்ளது. அதாவது, விவசாயி என்று கூறிக்கொண்டு மற்றவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர், போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றனர் என்று அர்த்தம் வரும் வகையில் பலரும் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

இந்த வாகனத்தின் மதிப்பு 2 கோடியா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்தியா முழுக்க பல மொழிகளில் இந்த வதந்தி பரவி வந்திருப்பதும், இது பற்றி பல ஃபேக்ட் செக் ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பதும் தெரிந்தது. இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஏதும் தகவல் கிடைக்கிறதா என்று பார்த்தோம்.

அசல் பதிவைக் காண: instagram.com I Archive

நமக்கு இந்த வாகனத்தின் உரிமையாளர் மன்ப்ரீத் சிங்கின் (Manpreet Singh) சமூக ஊடக பக்கங்கள் கிடைத்தன. அவற்றைப் பார்த்தபோது இந்த வாகனத்துடன் அவர் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக பல படங்கள் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.

வாகனத்தின் பதிவு எண் PB 12Z 8282 என்று இருப்பதைப் பல படங்கள் மூலமாக காண முடிந்தது. இது உண்மையில் பென்ஸ் வாகனம்தானா என்று அறிய அந்த வாகனத்தின் பதிவு எண்ணை ஆய்வு செய்தோம். எனவே, அரசின் வாகன பதிவு எண்ணைக் கொண்டு அந்த வாகனம் பற்றிய விவரங்களை அறிய உதவும் அரசின் வாஹன் இணையதளம் மூலமாக பார்த்தோம்.

அப்போது வண்டி பென்ஸ் தயாரிப்பு இல்லை. ஃபோர்ஸ் மோட்டார் லிமிடெட் தயாரித்த GURKHA FM2.6CR-4X2 HARD TOP என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வாகனத்தின் விலை என்ன என்று பார்த்தோம். அது 9.99 லட்சம் ரூபாயில் இருந்து 13.3 லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் விவரம் தெரிந்தது.

அசல் பதிவைக் காண: forcegurkha.co.in I Archive

அதே நேரத்தில் நாம் பார்த்த படத்தில் உள்ள வாகனத்துக்கும், GURKHA FM2.6CR-4X2 HARD TOP வாகனத்துக்கும் தொடர்பு இல்லை. தோற்றம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்தது. இது நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

மற்ற ஃபேக்ட் செக் கட்டுரைகளைப் பார்த்தோம். அதில், GURKHA வாகனத்தை வாங்கி பென்ஸ் தயாரிப்பு போல மாற்றியமைப்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் நாம் கூகுளில் தேடினோம். அப்போது GURKHA வாகனத்தை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் வாகனமாக ரூ.6.5 லட்சத்தில் மாற்றலாம் என்று குறிப்பிட்டு பல செய்திகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: news18.com I Archive

ஆல்ட் என்ற ஃபேக்ட் செக் ஊடகம் இந்த வாகனத்தின் உரிமையாளர் மன்ப்ரீத் சிங்கை தொடர்புகொண்டு பேசியுள்ளது. அப்போது அவர், "இது என்னுடைய வாகனம்தான். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 2020 டிசம்பர் 5ம் தேதி முதல் விவசாயிகள் பேரணியில் நான் பங்கேற்றுள்ளேன். இந்த வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனை போல் வடிவமைக்கப்பட்ட வாகனம். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் ஒழுங்காக வரி கட்டி வருகிறேன். விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்த என்னுடைய வாகனத்தின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதை நினைத்து வருந்துகிறேன். இந்த ஆன்லைன் தாக்குதல் என்னுடைய போராட்ட உணர்வை எந்த விதத்திலும் பாதிக்காது" என்றார்.

அரசு ஆவணங்கள் படி இந்த வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ் இல்லை. GURKHA வகை வானத்தை வாங்கி, கூடுதலாக செலவு செய்து மெர்சிடிஸ் பென்ஸ் வாகனம் போல மாற்றி அமைப்பது இந்தியாவில் வழக்கமான ஒன்றாகவே இருப்பதைக் காண முடிகிறது. GURKHA வாகனத்தின் மதிப்பு 10 முதல் 13 லட்சம் என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் போராட்டத்தில் ரூ.2 கோடி மதிப்புடைய வாகனத்துடன் பங்கேற்றவர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் வாகனத்தின் மதிப்பு ரூ.2 கோடி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற நபரின் வாகன மதிப்பு ரூ.2 கோடியா?- உண்மை அறிவோம்

Fact Check By: Chendur Pandian

Result: False