
மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் திரண்ட மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு நிற்கும் விடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை:EVM-க்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள் பாபா ஆதவ்வுடன் சரத் பவார் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இவிஎம்-ல் முறைகேடுகள் நடப்பதைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநில சமூக ஆர்வலர் பாபா ஆதவ் என்பவர் உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் பாபா ஆதவ் மற்றும் சரத் பவாருடன் பொது மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. வெவ்வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடிய போது 2020ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த போராட்டத்தின் காட்சி என்று இந்த வீடியோவை பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது தெரிந்தது.
தொடர்ந்து தேடிய போது தாய் மொழியில் 2020ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வெளியான எக்ஸ் தள பதிவு நமக்குக் கிடைத்தது. அதில் இந்த வீடியோ, Thanon Phaya Thai, Thailand என்ற இடத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கூகுள் மேப் தளத்தில் Thanon Phaya Thai, Thailand என்று டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று நினைவுத் தூண் மற்றும் அதன் அருகிலேயே மெட்ரோ ரயில் பாதை இருப்பது தெரிந்தது. அந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது இந்த வீடியோ எடுத்திருக்கலாம் என்று தெரிந்தது.
அந்த போராட்டம் தொடர்பான செய்தியை தேடிப் பார்த்தோம். 2020ம் ஆண்டு பிபிசி வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்தது. மன்னராட்சிக்கு எதிராக மக்களாட்சி முறைக்கு வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தின் வீடியோவை மும்பையில் இவிஎம் முறைக்கு எதிராக மக்கள் போராடினர் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2020ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை மும்பையில் இவிஎம்-க்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:இவிஎம் முறைக்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
