
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராணுவ வீரர்கள் கைகளால் அடித்துக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல்..
டிசம்பர் 9 அன்று தவாங் மோதலில் 300க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்களும், சுமார் 150 இந்திய வீரர்களும் இருந்தனர்.
ஏறக்குறைய 100 சீன வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் 12 பேர் இந்திய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய தரப்பில் 30 வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை உலக இராணுவச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 டிசம்பர் 12ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய – சீனா இடையே எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 2022 டிசம்பர் 9ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரை இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாகவும் அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சீன வீரர்களைத் தடுத்து நிறுத்திய இந்திய ராணுவத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை முன்பே பார்த்த நினைவு இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2020ல் சிக்கிமில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. 2020ம் ஆண்டு இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்று இந்த வீடியோவை என்டிடிவி 2020ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தது.
என்டிடிவி மட்டுமின்றி 2020ம் ஆண்டில் பல யூடியூபர்கள், ஃபேஸ்புக் பயனர்கள் இந்த வீடியோவை பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. இதன் தெளிவான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்தோம். அதில் இடம் பெற்ற காட்சிகள், ஆடியோ எல்லாம் ஒத்துப்போனது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com
இதன் மூலம் 2020ம் ஆண்டு வீடியோவை தற்போது நடந்த நிகழ்வுடன் தொடர்புப்படுத்திப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
அருணாச்சலபிரதேச எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீனர்களை விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள் என்று பரவும் வீடியோ 2020ல் சிக்கிம் எல்லையில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்தியா – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
