வீட்டில் இருந்தே பென்சில் பேக் செய்யும் வேலையா?- நட்ராஜ் நிறுவனம் பெயரில் பரவும் வதந்தி!

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பென்சில், பேனாக்களை அட்டைப்பெட்டியில் அடுக்குவது போன்று புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது, 1 மாத சம்பளம் உங்கள் ✔30000

  அட்வான்ஸ் 15000✔ பென்சில் பேக்கிங் செய்ய வேண்டும், வீட்டில் திறந்த பொருட்கள் வரும், பொருட்கள் பார்சல் டெலிவரி செய்யப்படும், படிக்காதவர்களும் செய்யலாம், படித்தவர்களும் செய்யலாம், பெண்களும் செய்யலாம்

 வாட்ஸ்அப் எண் 8532831636 ✔ வாட்ஸ்அப் எண் ☎8532831636.  எந்த வேலையும் இன்றே தொடங்குங்கள் 24 தாய் பிரசவம் ✔✔✔ என்ற முகவரிக்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Ranjit Thkor Ranjit Thkor என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 டிசம்பர் 12ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பென்சில் தயாரிக்கும் நிறுவனம், தயாரிக்கும் இடத்திலேயே பேக் செய்து முடித்துவிடும். அதை ஒரு பெட்டியில் போட்டு அனுப்பி, பார்சல் சர்வீசில் வீடுகளுக்கு அனுப்பி சிறிய பாக்கெட்டில் நிரப்பித் தரும்படி கேட்பது எல்லாம் வேடிக்கையாக இருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் நட்ராஜ் பென்சில் நிறுவனம் இப்படி ஏதும் அறிவிப்பு செய்துள்ளதா, இப்படி ஏதும் திட்டம் உள்ளதா என்று அறிய அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தைப் பார்வையிட்டோம். இந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நட்ராஜ் பென்சில்களை தயாரிப்பதாகத் தெரிந்தது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்த போது, முதலில் வீடியோ ஒன்று ப்ளே ஆனது. 

உண்மைப் பதிவைக் காண: hindustanpencils.com I Archive

அந்த வீடியோவில், சமூக ஊடகங்களில் நட்ராஜ் பென்சில் வேலை வாய்ப்பு தொடர்பாக பரவும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், நட்ராஜ் பென்சில் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் தயாரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே, வீடுகளில் வைத்து பேக் செய்ய வேண்டிய தேவையில்லை. போலியான தகவலைப் பரப்பி பண மோசடி நடக்கிறது. எனவே, கவனத்துடன் இருக்கவும் என்று கூறப்பட்டிருந்தது. 

அதன் யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது நட்ராஜ் பென்சில் பேக்கிஜ் வேலை என்று பரவும் வதந்தி பற்றி தமிழில் வீடியோ வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் நட்ராஜ் பென்சில் நிறுவனம் வேலை வாய்ப்பை வழங்குகிறது அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோம். அழைப்பு சென்றது. ஆனால், யாரும் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து தேடும் போது ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் இது தொடர்பான கட்டுரை வெளியாகி இருப்பது தெரிந்தது. மேலும், கேரள காவல் துறை சார்பில் எச்சரிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த தகவல் போலியானது என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

வீட்டில் இருந்து பென்சிலை அடுக்கும் வேலை அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்று நட்ராஜ் பென்சிலை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வீட்டில் இருந்தே பென்சில் பேக் செய்யும் வேலையா?- நட்ராஜ் நிறுவனம் பெயரில் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False