
தி.மு.க ஆட்சியில் கோவிலுக்கு வந்தவர்களை போலீசார் தாக்கியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கோவிலில் இருந்த பூசாரி உள்ளிட்டவர்களை வெளியே அழைத்து காவல்துறை அதிகாரி ஒருவர் பிரம்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் திருட்டு திராவிடியா மவனுங்களா நாசமாத்தான் போகப்போறீங்கடா #கூலிக்குமாரடித்தல் #தேமீடியாஸ் #இந்துவிரோததிமுக #200உபிஸ் *😡கண்டிக்கிறோம்…* *இதுபோல எங்காவது மசூதியிலும் சர்ச்களிலும் பக்தர்களை அடித்த விடியோவை வெளியிடுமா மதசார்பற்ற தமிழக காவல்துறை…* *ஹிந்துக்கள் தான் தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்…* *ஹிந்து விரோத அரசிற்கு இனி எந்த காலத்திலும் வாக்களிக்காமல்..*. *இந்துக்கள் ,, திராவிட ஆட்சியை புறக்கணிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்து கோவிலுக்கு வந்ததாலேயே மக்களை தி.மு.க ஆட்சியில் காவல்துறை அதிகாரி தாக்கியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்துக்கள் கோவிலுக்கு செல்வதை தி.மு.க அரசு தடுப்பது போன்று பதிவு உள்ளது. அப்படி யாரையும் தடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு நிச்சயம் இருக்காது. உண்மையில் அப்படி தடுத்தால் பெரும்பான்மையாக வசிக்கும் இந்துக்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.
வீடியோவில் ஒருவர் கொரோனா என்று கூறுவதைக் கேட்க முடிந்தது. எனவே, கொரோனா லாக்டவுன் காலத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. கொரோனா காலத்தில் எல்லா மத வழிபாட்டுத்தளங்களுக்கும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தொழுகை நடத்தியதாக இஸ்லாமியர்கள் மீது கூட போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2020ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி இந்த வீடியோவை ஒருவர் பதிவிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதில் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடவில்லை. “சுவாமி வந்து முதல் அடியை பூசாரிக்கு கொடுத்தார்” என்று நையாண்டியாக பதிவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடிய போது 2020 மார்ச் 29ம் தேதி யூடியூபில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்திருந்ததை கண்டறிந்தோம்.
2020ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி என்பது கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அப்போதுதான் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் அப்போது அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியிலிருந்தார். அ.தி.மு.க கூட்டணியில் பாஜக-வும் இருந்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதற்கு பிறகு வந்த சட்டமன்ற தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துத்தான் பேட்டியிட்டன. கொரோனா காலத்தில் தடையை மீறி வழிபாடு செய்தவர்கள் மீது அதிமுக அரசின் போலீஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் தடையை மீறி வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்றவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அது தொடர்பாக 2020ம் ஆண்டு வெளியான வீடியோ தொகுப்பில் கூட இந்த வீடியோ இடம் பெற்றிருந்தது. இந்த விவரங்களை எல்லாம் மறைத்து இந்த சம்பவத்திற்கு திமுக அரசுதான் காரணம் என்பது போல் தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க ஆட்சியில் கோவிலுக்கு வந்த இந்துக்களை போலீஸ் வைத்து தாக்கப்பட்டனர் என்று பரவும் வீடியோ 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பதிவானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“தி.மு.க ஆட்சியல் கோவிலுக்கு வந்தவர்களைத் தாக்கிய போலீஸ்” – என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult:Missing Context


