
நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த பணம் மற்றும் ஆபரணங்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
கட்டுக்கட்டாக ரூ.2000 மற்றும் ரூ.100 நோட்டு அடுக்கு வைக்கப்பட்டுள்ள படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த படத்தில் நகைகள் கொஞ்சம் உள்ளன. நிலைத் தகவலில், “நடிகர் விஜயின் வீட்டில் நடந்த. IT ரெய்டில் கிடைத்த பணம் மற்றும் ஆபரணங்கள் பாரீர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Durai Kandasamy என்பவர் 2020 பிப்ரவரி 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிகில் படத்தில் நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பாக அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 24 மணி நேரம் விஜய் வீட்டில் சோதனை மற்றும் விசாரணை நடந்ததாக செய்திகள் வெளியாகின.
மேலும், பிகில் படத்துக்காக நடிகர் விஜய் பெற்ற சம்பளம், அதை அவர் அசையா சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பாக மட்டுமே விசாரணை நடந்ததாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. பைனான்சியர் வீட்டில் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்று அறிவித்த வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டிலிருந்து ரொக்கம் கைப்பற்றியதாக குறிப்பிடவில்லை. விசாரணை மட்டுமே நடந்தது என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஏற்கனவே ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது.

Pib.gov.in Link | Archived Link 1 |
tamil.news18.com | Archived Link 2 |
விஜய் வீட்டிலிருந்து ரொக்கம் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை கூறியிருப்பதன் மூலம் இந்த தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இருப்பினும், இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

Search Link | indiatvnews.com | Archived Link |
இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது. 2016ம் ஆண்டு கர்நாடகாவில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக பல செய்தி ஆதாரங்கள் நமக்கு கிடைத்தன. 2016 டிசம்பருக்குப் பிறகு இந்த புகைப்படத்தை வருமானவரித்துறை பணத்தைக் கைப்பற்றியது என்று வெளியாகும் செய்திகளுக்கு எல்லாம் செய்தி ஊடகங்கள் பயன்படுத்தி வந்ததையும் காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில்,
வருமான வரித்துறை நடிகர் விஜய் வீட்டிலிருந்து ரொக்கம் கைப்பற்றவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த வருமான வரி சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் கை தொடர்பான படம் இது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழைய படத்தை எடுத்து, நடிகர் விஜய் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்பியது தெளிவாகிறது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நடிகர் விஜய் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக பகிரப்படும் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நடிகர் விஜய் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதா?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
