
‘’அமெரிக்காவில் இருந்து இராணுவ விமானத்தில் குத்தவச்சு வெளியேற்றப்படும் இந்தியர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மோடியின் நண்பன் என டிரம்பை தலையில் தூக்கி வைத்தும், கோவில் கட்டியும் கொண்டாடிய சங்கிகளா…
இந்திய நாட்டு பிரஜைகளை நாட்டைவிட்டு துரத்த ஆதரவளித்த அமெரிக்கவாழ் சங்கிகளுக்கு டிரம்ப் வைத்த ஆப்பைப் பார்த்தீர்களா??
கள்ளத்தனமாக குடியேறிய வந்தேறிக் கூட்டத்தை அமேரிக்க இராணுவ விமானத்தில்நாடு கடத்துவார்களாம். அதையும் மோடியின் சாதனையாக நினைத்து பெருமையடிக்கும் முன்….
“ராணுவ விமானம்” என்றால் நல்ல சொகுசு வசதிகள் கொண்ட விமானம் என்று பொருள் அல்ல. அதுல கூட்டமதிகமானால் நீங்க குத்தவச்சுதான் வர முடியும். இருக்கை விமானிக்கு மட்டுமே. வேண்டுமானால் சம்மணம் போட்டுஇருக்கலாம். விமானம் ஏர் பாக்கெட்டுகளில் குதிக்கும்போது சில சமயங்களில் சிறிய காயங்கள் ஏற்படலாம், ஏனெனில் உங்களுக்கு அடுத்திருப்பவர் கூட உங்கக் கூடவே குதிப்பார்.
சில நேரங்களில் பெரும் காயங்களும் ஏற்படலாம். விமானத்தில் ஏறும் போது தண்ணீர் பாட்டில் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.ஏசி இருக்காது. இந்த விமானத்தில் 1000-2000 பேர் அமரலாம், சாதாரண விமானத்தில் 100-300 பேர் வரை பயணிக்கமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். பெரிய லாரிகள் மற்றும் டாங்கிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இவை. எருமை மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரி போல உங்களை இந்த விமானங்களில்நாடு கடத்துகிறது அமேரிக்கா.
மாஸ்டர் ஸ்ட்ரோக் மன்னன் மோடியின் வெளியுறவு கொள்கைகளின் இலட்சணம்தான் பெரும்பான்மையான குஜராத் வந்தேறிகள் அனுபவிக்கிறீர்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள்!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவில் புதியதாக அதிபர் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாட்டு மக்களையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்க ராணுவம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் சட்டவிரோதமாகக் குடியேறிய நபர்களை அடையாளம் கண்டு, வெளியேற்றி வருகிறது. இதன்போது, மனிதாபிமானம் இன்றி அமெரிக்க ராணுவம் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Hindustan Times l NDTV l The Hindu
இத்தகைய சூழலில், அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக மிருகங்களை போன்று விமானத்தில் அடைக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ளதுபோன்ற புகைப்படத்தை சிலர் பரப்புகின்றனர்.
ஆனால், இந்த புகைப்படம் 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட ஒன்றாகும். இதில் Alamy என்ற லோகோ உள்ளதைக் காண முடிகிறது.
ஆம், 2021ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால், அந்நாட்டு மக்கள் உள்பட பலரும் அமெரிக்க ராணுவ விமானம் மூலமாக, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். அப்போது எடுத்த படம்தான் இது.
Alamy இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை எடுத்து, தற்போதைய அமெரிக்க அரசியலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள். கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
USA Today l Times of India l Al Jazeera
எனவே, 2021ம் ஆண்டு அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளை மீட்டபோது எடுத்த புகைப்படத்தை தற்போது வேண்டுமென்றே சிலர் சமூக வலைதளங்களில் மறுபகிர்வு செய்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Pankaj IyerResult: False
