கேதார்நாத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நகரத்தில் வீதிகளில் சகதியுடன் கூடிய வெள்ளம் பாய்ந்தோடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், "Kedarnath update 2024" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "கேதார்நாத்

இப்படி நடக்கும் என்று யாரும் எச்சரிக்கை செய்யவில்லையா? கேரளாவில் எச்சரிக்கை செய்ய முடிந்த அமித் ஷாவால் இதை காப்பாற்ற முடியவில்லையா?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் உடனே அது பற்றி ஏற்கனவே எச்சரித்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இது பற்றி மாநில அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டதா என்று கேள்வி எழுப்பியும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மைப் பதிவைக் காண: thesun.co.uk I Archive

இந்த வீடியோவை ஏற்கனவே சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டிருந்ததைப் பார்த்த நினைவு இருந்ததாலும், வெளிநாட்டில் எங்கோ நடந்தது என்று பார்த்த நினைவு இருந்ததாலும் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில் இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் உள்ளிட்ட புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்ய உதவும் தளங்களில் பதிவேற்றித் தேடினோம்.

நம்முடைய தேடலில் பல சர்வதேச ஊடகங்களின் யூடியூப் பக்கங்களிலும் 2021ம் ஆண்டில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அனைத்திலும் இந்த சம்பவம் ஜப்பானில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜப்பானின் அட்டாமி (Atami) நகாில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் பலியானதாக பல வீடியோவுடன் கூடிய செய்திகள் நமக்குக் கிடைத்தன. அந்த வீடியோக்களும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒத்துப்போனது.

அட்டாமி நகரில் எந்த இடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது என்று அறிய தொடர்ந்து தேடினோம். Shizuoka Izusan Port என்று சில தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கூகுள் மேப்-ல் தேடிப் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருக்கும் சிவப்பு நிற கட்டிடம் நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் இந்த வீடியோ ஜப்பானைச் சார்ந்தது தான் என்பது உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: Google Map I Archive

முடிவு:

கேதார்நாத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு என்று பரவும் வீடியோ 2021ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கேதார்நாத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False