பொறியியல் கல்லூரிகளுக்குத் தடை விதித்த அண்ணா பல்கலைக்கழகம்?– ஒன் இந்தியா செய்தியால் குழப்பம்!

கல்வி சமூக ஊடகம்

பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தலைப்பில் வெளியான செய்தி வியப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

மாணவர்களே உஷார்.! பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி.!

Archived link 1

Archived link 2

ஒன் இந்தியா தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடைவிதித்த அண்ணா பல்கலைக் கழகம் என்று ஒரு செய்தி பகிரப்பட்டு இருந்தது. tamil.careerindia.com என்ற இணைய தளத்தில் வெளியான இந்த செய்தியை ஒன் இந்தியா தமிழ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக சூரப்பா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது நியமத்துக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சூரப்பா துணை வேந்தராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த முடியாது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமே கலந்தாய்வை நடத்துகிறது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. இந்த சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் தடைவிதித்துள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக இந்த தடை என்று செய்தியை திறந்து பார்த்தபோது, விதிமுறைகளை சரியாக பின்பற்றாத சில கல்லூரிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்ட தகவல் தெரிந்தது.

tamil.careerindia.com வெளியிட்டுள்ள செய்தியில்,

“பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என்ற அடிப்படையில் இருக்கிறதா, ஆசிரியர் கல்வித் தகுதி, ஆய்வகம், கணினிகளின் எண்ணிக்கை, இணையதள வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்திருக்கிறதா என்று அண்ணா பல்கலைக் கழகம் ஆய்வு நடத்துவது வழக்கம்.

அதன் அடிப்படையில் 2019-20 கல்வி ஆண்டுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் 92 பொறியியல் கல்லூரிகள் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 53 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 92 பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.

ANNA UNIVERSITY 2.png

தற்போது இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மட்டுமே நடக்கிறது. இந்த சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடை என்ற தலைப்பு ஒட்டு மொத்தத்தில் எல்லா பொறியியல் கல்லூரிகளுக்கும் தடை என்பது போன்ற தோற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

மேலும், தலைப்பில் கூறியிருந்தது போல இந்த கல்லூரிகளுக்கு முழுதான தடை எதுவும் விதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட 92 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மாணவர் சேர்க்கை 25 முதல் 50 சதவிகிதம் வரை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அதனால், கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாகச் சொல்வது ஏற்புடையதாக இல்லை. செய்தின் தலைப்பில் ஏற்பட்ட தவறால், அதன் அர்த்தமே மாறுகிறது.

இதே செய்தி சமயம் இணையத்தில், 92 பொறியியல் கல்லூரிகளில் இன்ஜீனியரிங் சீட் குறைப்பு என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

உள் கட்டமைப்பு வசதி இல்லாத 92 பொறியியல் கல்லூரிகள்: மாணவர் சேர்க்கையை குறைத்து அண்ணா பல்கலை. நடவடிக்கை என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஇ தமிழில், 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சிக்கல்: சிக்கலில் மாட்டிக்கிறாதீங்க மாணவர்களே! என்று தலைப்பிட்டுள்ளனர்.

ஆனால், tamil.careerindia.com மட்டும் பொறியியல் கல்லூரிகளுக்கு தடை என்று தலைப்பிட்டுள்ளது. அதில் 92 பொறியியல் கல்லூரிகளுக்குத் தடை என்றாவது குறிப்பிட்டிருக்கலாம். கட்டுரையை விளக்கமாக எழுதிவிட்டு, பரபரப்புக்காக தவறான தலைப்பு வைத்துள்ளது புரிந்தது.

நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், மேற்கண்ட செய்திக் கட்டுரையின் தலைப்பு தவறாக வைக்கப்பட்டுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்த செய்தியின் தலைப்பில் தவறு இருப்பது நம்முடைய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பொறியியல் கல்லூரிகளுக்குத் தடை விதித்த அண்ணா பல்கலைக்கழகம்?– ஒன் இந்தியா செய்தியால் குழப்பம்!

Fact Check By: Praveen Kumar 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •