உங்கள் தேச பக்தி இவ்வளவு தான் என்று மறைமுகமாக பாஜக-வை விமர்சித்து ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தேசியக் கொடியேற்றிவிட்டு தேசிய கீதத்தை அரசியல் கட்சித் தொண்டர்கள் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஒருவர் மிக வேகமாக தேசிய கீதத்தைப் பாடத் தொடங்குகிறார். அதே வேகத்தில் தப்பும், தவறுமாக பாடுகிறார். ஒரு கட்டத்தில் பாட்டை நிறுத்திவிட்டுகிறார். அருகில் இருந்தவர்கள் ஒரு மாதிரியாக சமாளிக்கின்றனர். நிலைத் தகவலில், "தேசிய கீதம் கூட தெரியாத சங்கிகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

இதே வீடியோ எக்ஸ் தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட எக்ஸ் தள பதிவின் நிலைத் தகவலில், "இவ்வளவு தான் உங்க தேசபக்தி.. சோதிக்காதிங்கடா சோதிக்காதிங்க #IndependenceDay2024" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில வருடங்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள் தேசிய கீதத்தைத் தவறாகப் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை தெளிவில்லாத வீடியோவாக மாற்றி இப்போது பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது. தேசிய கீதத்தைத் தவறாகப் பாடியவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் என்ற அர்த்தம் வரும் வகையில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

கூகுளில் தேசிய கீதத்தைத் தவறாக பாடிய சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, 2021ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தின விழாவின் போது இந்த காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில், "தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் இந்திய தேசிய கீதத்தின் வார்த்தைகளை மறந்த சமாஜ்வாடி கட்சி எம்.பி எஸ்.டி.ஹசன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஏஎன்ஐ வெளியிட்டிருந்த வீடியோவை அவர்கள் அந்த செய்தியில் பதிவிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான அந்த காணொளியையும் தேடி எடுத்தோம். அதில் முழு வீடியோவும் இருந்தது. சமாஜ்வாடி கட்சி எம்.பி தேசியக் கொடியை ஏற்றுகிறார். அருகில் இருந்தவர் தேசிய கீதத்தைச் சத்தமாக பாடுகிறார். அப்போது திடீரென்று பாடலின் வரியை அந்த நபர் மாற்றுகிறார். உடனே எம்.பி அந்த நபரை நிறுத்தச் சொல்கிறார்.

Archive

அதன் பிறகு யாரும் சில விநாடிகளுக்குப் பாடவில்லை. எல்லோரும் திணறுகின்றனர். கடைசியில் வேறு ஒருவர் திராவிட என்று தொடங்க மீண்டும் தேசிய கீதம் பாடப்படுகிறது. ஆனாலும் அதன் பிறகும் தவறாகவே பாடப்படுகிறது. இந்த வீடியோ 2021ம் ஆண்டு வைரலான ஒன்று, என குறிப்பிடப்பட்டிருந்தது.

நம்முடைய ஆய்வில் சமாஜ்வாடி கட்சி எம்.பி மற்றும் தொண்டர்கள் தேசிய கீதத்தைத் தப்பும் தவறுமாகப் பாடிய வீடியோவை இப்போது 2024ம் ஆண்டில் சங்கிகள் அதாவது பாஜக-வினர் தேசிய கீதத்தை தவறாகப் பாடினார்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2021ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி எம்.பி மற்றும் தொண்டர்கள் தேசிய கீதத்தை தவறாக பாடிய வீடியோவை சங்கிகளுக்கு தேசிய கீதம் கூட பாடத் தெரியவில்லை என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தேசிய கீதத்தை தவறாகப் பாடியவர்கள் பாஜக தொண்டர்களா?

Fact Check By: Chendur Pandian

Result: False