
தொழிலதிபரும், பங்குச் சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாரு நடனமாடிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Mr. Rakesh Jhunjhunwala who died today this video shot few days before his death .. இன்று இறந்த திரு.ராகேஷ் ஜுன்ஜுன்வாலா , இந்த வீடியோ அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.. மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை விவேகா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இதே வீடியோ மற்றும் தகவலை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பங்குச் சந்தையில் பல கோடி சம்பாதித்தவரும், தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த ஆகஸ்ட் 14, 2022 அன்று உயிரிழந்தார். சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நடனமாடிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் இருப்பது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாதான். ஆனால், இந்த வீடியோ அவர் உயிரிழப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதுவும் அவர் உயிரிழப்பதற்கு சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு 2021 ஆகஸ்ட் 15ம் தேதி அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதே போன்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழந்தபோது இந்த வீடியோவை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அதில், இந்த வீடியோ 2021 ஜூலை மாதம் 5ம் தேதி எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழந்த 2022 ஆகஸ்ட் 14ம் தேதியிலோ, அதற்கு ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்பாகவோ எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பழைய வீடியோவை எடுத்து, அவர் உயிரிழப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு எடுக்கப்பட்ட கடைசி வீடியோ என்று பரவும் வீடியோ 2021 ஜூலையில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மறைந்த தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் கடைசி வீடியோவா இது?
Fact Check By: Chendur PandianResult: False
