தேசியக் கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுத்த மோடி!- நியூஸ் கார்டு உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தேசிய கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என இந்திய தேசிய கதர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி உற்பத்திக்கான மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுக்கக்கூடாது! வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என அறிவித்து, இனி தேசியக்கொடிகளைக் கதர் துணிக்குப் பதிலாக பாலியெஸ்டர் துணியிலும் தயாரிக்கலாம் என சட்டமியற்றி, பல கோடி தேசியக்கொடிகளைத் தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. இந்திய தேசிய கதர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்” என்று இருந்தது.

இந்த பதிவை உங்கள் மீம்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தேசியக் கொடியை கதர், பருத்தி, பட்டு, கம்பளி உள்ளிட்ட குறிப்பிட்ட நூல்களில் மட்டும் தயாரிக்க வேண்டும் என்று இருந்த சட்டத்தை இந்திய அரசு மாற்றியது. பாலிஸ்டர், விசைத்தறி துணிகளால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, 75வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். 

பாலிஸ்டர் துணியில் தேசியக் கொடியை தயாரிக்கலாம் என்ற அறிவிப்பு, வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்ற அழைப்பு விடுத்தது போன்ற செயல்கள் மறைமுகமாக பாலிஸ்டர் துணி உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானிக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்து எழுந்தது. நேரடியாக தேசியக் கொடியை தயாரித்து விற்பனை செய்யும் அனுமதி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்திய தேசிய கதர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு என்று ஏதாவது அமைப்பு உள்ளதா, அந்த அமைப்பு தேசியக் கொடி தயாரிப்பு தொடர்பாக அறிக்கை – பேட்டி என அதையாவது அளித்துள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு கூட்டமைப்பும் இருப்பதாக நம்மால் கண்டறிய முடியவில்லை. மேலும், அப்படி ஒரு கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டதாகவோ பேட்டி அளித்ததாகவோ செய்தி எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, நியூஸ் 7 தமிழில் வெளியான நியூஸ் கார்டு உண்மைதானா என்று அறிய அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம்.

அப்போது, இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை இது “FAKE” (போலியானது) என்று குறிப்பிட்டு அவர்கள் பதிவிட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தேசியக் கொடி உற்பத்தி மொத்த ஆர்டரையும் அம்பானி நிறுவத்துக்கு மோடி அளித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தேசியக் கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுத்த மோடி!- நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False