FACT CHECK: எச்.ராஜாவை தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக பரவும் வதந்தி!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தாமல் குலப் பெருமை காத்த எச்.ராஜா என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜா மட்டும் கைகூப்பி மரியாதை செலுத்தாமல் உள்ளார். அதன் கீழ், "பிராமணர்களை விட தாழ்ந்த வர்ணத்தில் பிறந்த ஒருவரை வாக்கரசியலுக்காக கைகூப்பி வணங்காமல் பிராமண குலப் பெருமையைக் காத்த ஶ்ரீமான் ஹெச்.ராஜா அவர்களை தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் மனமுவந்து பாராட்டுகிறது" என்று உள்ளது.
R.G.Saravana Moorthy என்பவர் 2020 நவம்பர் 3ம் தேதி பகிர்ந்ததை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். இவரைப் போல பலரும் இந்த படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேவர் நினைவிடத்தில் வழங்கப்பட்ட திருநீற்றை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கீழே போட்டுவிட்டார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து மரியாதை செலுத்தாத எச்.ராஜாவை புகழ்ந்து பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டது போன்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தை விமர்சிக்கும் வகையில் பிராமணர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டது போல உள்ளது. பலரும் இந்த புகைப்பட பதிவை பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
இந்த அறிக்கை உண்மையா, அது போன்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை ஏதும் வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். கூகுளில் இது தொடர்பாக டைப் செய்து தேடியபோது, இணைய ஊடகம் ஒன்றை மிகக் கடுமையாக விமர்சித்து எச்.ராஜா சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெரிந்தது.
ஒன் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியை படித்துப் பார்த்தோம். அதில், சமூக ஊடகங்களில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் பெயரில் அறிக்கை பரவியதால் அது தொடர்பாக செய்தி வெளியிட்டதாகவும், ஆனால் அது தவறானது என்று எச்.ராஜா தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: oneindia.com I Archive
மேலும், தமிழ்நாடு பிராமணர் சங்கம் வெளியிட்ட அறிக்கையையும் அவர் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். எச்.ராஜா வெளியிட்ட அந்த அறிக்கையைத் தேடி எடுத்தோம். "தாம்ப்ராஸ் மறுப்பு" என்று தலைப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.
அதில், "சமூக வலைதளங்களில் யாரோ ஒருவரோ அல்லது ஒரு இயக்கமோ எங்களது பெயரை முறைகேடாக பயன்படுத்தி ஓர் உண்மைக்கு புறம்பான தகவலைப் பரப்பி வருவதாக அறியப்படுகிறது. எங்கள் சங்க விதிகளின்படி அறிக்கை கொடுப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவராகிய எனக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அறிக்கையிலும் நான் எங்களது விலாசம் இன்றி அறிக்கை வெளியிடுவது இல்லை.
எங்கள் சங்கத்தின் பெயரை முறைதவறிப் பயன்படுத்தி, பொய்யான அடிப்படையிலும், பாஜக தலைவர் எச்.ராஜா அவர்களை சம்பந்தப்படுத்தியும் வெளியிடப்பட்டுள்ள அந்த மோசடி அறிக்கைக்கும், தமிழ்நாடு பிராமணர் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படத் தெரிவிக்கிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது. எச்.ராஜா வெளியிட்டிருந்த பதிவுக்கு பதில் அளித்த பலரும் இந்த அறிக்கை எடிட் செய்யப்பட்டது, போலியாக வாங்கப்பட்டது என்ற வகையில் கூறியிருந்தனர்.
எனவே, இந்த அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு பிராமணர் சங்கத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். தலைமை நிலையச் செயலாளர் மயிலை பாலு நம்மிடம் பேசினார். நம்முடைய தொலைபேசி எண் வாங்கிக் கொண்டு விவரம் தெரிவிப்பதாகக் கூறினார். அதன் பிறகு தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கே.ராமநாதன் ஐயர் நம்மிடம் பேசினார்.
2020 நவம்பர் 3ம் தேதி வதந்தி பரவியதும் உடனடியாக அது போலியானது என்று அறிக்கையுடன் சேர்த்து நான் பதிவிட்டிருந்தேன். எல்லா பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் இந்த அறிக்கையை நாங்கள் அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் அனைவரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் இதை பகிர்ந்துள்ளனர். எங்கள் பெயரை பயன்படுத்தி வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு தொடரப்படும்" என்றார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் மூலம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்தாத எச்.ராஜாவுக்கு நன்றி என்று வெளியான அறிக்கை போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தாத எச்.ராஜாவுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் நன்றி கூறியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:எச்.ராஜாவை தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False