வட இந்தியாவில் உயிருக்கு பயந்து பாஜக வேட்பாளர் தப்பி ஓடிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாஜக வேட்பாளர் பாதுகாவலர்களுடன் வேகமாக ஓடி வந்து காரில் ஏறி செல்கிறார். அவரை மக்கள் கட்டையுடன் துரத்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "சங்கி வேட்பாளர்கள் உயிர் பயத்தில் ஓடுகிறார்கள்.. மக்கள் உருட்டுக் கட்டைகளோடு துரத்துகிறார்கள்.. வடக்கில் கள நிலவரம் கலவரமாக உள்ளது..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

உண்மை அறிவோம்:

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் சூழலில், வட இந்தியாவில் பாஜக வேட்பாளர்களை பொது மக்கள் விரட்டி வருகின்றனர் என்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையா, எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2021ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் வீடியோவில் இருக்கும் நபர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்தான் என்பதும் தெரியவந்தது.

2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போது போல்பூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அனிர்பான் கங்குலி (Anirban Ganguly) என்பவர் போட்டியிட்டார். இல்லம்பசார் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது அவரை பொது மக்கள் விரட்டினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் கூகுளில் தேடியபோது அனிர்பன் கங்குலி வெளியிட்ட ட்வீட் பதிவும் நமக்குக் கிடைத்தது. அதில் தாக்குதலுக்கு குறிப்பிட்ட மதத்தினரைக் குற்றம்சாட்டி அவர் பதிவிட்டிருந்தார். அந்த தேர்தலில் அந்த தொகுதியில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

நம்முடைய ஆய்வில், பாஜக வேட்பாளரை பொது மக்கள் விரட்டினார்கள் என்று பகிரப்படும் வீடியோ 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ல் இந்த சம்பவம் நடந்தது என்று பதிவிட்டிருந்தால், இப்போது நடந்தது என்ற தோற்றம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

Archive

முடிவு:

வட இந்தியாவில் பாஜக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுவதால் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பரவும் வீடியோ 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக வேட்பாளர்களை விரட்டியடிக்கும் வட இந்தியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Misleading