டிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா?

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த வீடியோவில், டிரம்ப் உருவ பொம்மையை சிலர் குத்தியும், உதைத்தும் விளையாடுவதைக் காண முடிகிறது. ஆனால், இதனை தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் அரசியல் கொந்தளிப்பு சூழலுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர். இதனால், இது உண்மையாக இருக்கும் என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அமெரிக்காவில் உள்ள மின்னாபோலிஸ் பகுதியில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு நபரை வெள்ளையின போலீஸ் அதிகாரி கழுத்தில் முழங்காலை வைத்து அமுக்கி கொடுமைப்படுத்திய வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் மூர்ச்சையான அந்த கறுப்பின நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்களில் பொதுமக்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படும் இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, வெள்ளை மாளிகையை முற்றுகையிட பொதுமக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் பணியில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். உலக அளவில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒருபகுதியாகவே, மேற்கண்ட வீடியோவை தீக்கதிர் ஊடகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இந்த வீடியோ, மேலோட்டமாகப் பார்க்கும்போது, டிரம்ப் ஆட்சி மீது அமெரிக்க மக்கள் கடுங்கோபத்தில் உள்ளதை உணர்த்துவதாகவே நமக்கு தோன்றுகிறது. ஆனால், சற்று கவனமாகப் பார்த்தால், வீடியோவின் இடையே, ஹிலாரி கிளிண்டன் உருவ பொம்மையும் தென்படுகிறது.

இதை வைத்துப் பார்த்தால், இந்த வீடியோ கண்டிப்பாக, தற்போது எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, இது எப்போது எடுக்கப்பட்டது என கண்டறியும் ஆவலில் தகவல் தேடினோம். அப்போது, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இது எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. 

அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் உருவ பொம்மையை அமெரிக்க மக்கள், தமது இஷ்டம்போல அடித்தும், உதைத்தும், முத்தம் கொடுத்தும் ஆதரவு மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

இதன் முழு வீடியோ கீழே தரப்பட்டுள்ளது. 

Archived Link 

இதனை எடிட் செய்து, கடந்த ஏப்ரல் மாதம் Michael Moore என்ற ஹாலிவுட் சினிமா பிரபலம், தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாள் முன்பாக, 2020 நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை குறிப்பிட்டு, தகவல் பகிர்ந்திருக்கிறார். 

https://twitter.com/MMFlint/status/1251670927164792832

Archived Link

அவரது ட்விட்டர் பதிவில் பழைய வீடியோ இடம்பெற்றுள்ளதோடு, இது தேவையற்ற அரசியல் சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளதென்று கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர். 

Foxnews LinkWorldnewsnetwork LinkFitstation Link 

மைக்கேல் மூர் பகிர்ந்த பழைய வீடியோவை சிலர் தற்போது அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுதான் என நம்பி ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். அதைத்தான் தீக்கதிர் ஊடகமும் செய்திருக்கிறது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்:-

1) 2016ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி ஹிலாரி, டிரம்ப் உருவபொம்மையை அடித்தும், முத்தம் கொடுத்தும் ஆதரவு, எதிர்ப்பை காட்டும் ஒரு நிகழ்ச்சியை யூடியுப் சேனல் ஒன்று நடத்தியுள்ளது. 

2) அந்த வீடியோவை எடுத்து புதியதுபோல மைக்கேல் மூர் என்ற சினிமா பிரபலம், 2020 நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை சுட்டிக்காட்டி ரீட்விட் செய்துள்ளார். 

3) இதனை பலர் புரிந்துகொள்ளாமல், தற்போது அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர தொடங்கியுள்ளனர். 

4) 2016ல் அதிபர் தேர்தலை சந்தித்து, வெற்றி பெற்று 2017ல்தான் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.  

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி பழைய வீடியோவை புதியதுபோல பகிர்ந்துள்ளதாக நிரூபித்துள்ளோம். இதுபோல சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாரேனும் பார்த்தால், எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:டிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False