
“செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தார்” என்று எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் சிறு பகுதியை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தரம் தாழ்ந்து இப்படி போய்விட்டார் என்று தான்… கர்ணன் படத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா என்று வருவது போல இப்போது அது போல நடந்துவிட்டது” என்கிறார். வீடியோவில், “எடப்பாடி பழனிச்சாமியை பாடல் பாடி கிண்டல் செய்த ஜெயக்குமார்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத்தகவலில், “எடப்பாடி பழனிச்சாமியை பாடல் பாடி கிண்டல் செய்த “பிரதான சாலை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாஜக கூட்டணியால் தான் தேர்தல்களில் அ.தி.மு.க தோல்வியடைந்தது என்று கூறி வந்தவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது மீண்டும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உருவாகி உள்ளது. இதை வைத்து ஜெயக்குமாரை வைத்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் அறிவித்ததாக நியூஸ் கார்டு பரவியது. அது போலியானது என்று உறுதி செய்திருந்தோம்.
இந்த நிலையில் பா.ஜ.க-வில் கூட்டணி சேர்ந்ததன் மூலம் சேர இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று ஜெயக்குமார் கூறியதாக வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமியை ஜெயக்குமார் விமர்சித்தது போன்று எங்கும் இல்லை. அதே போன்று பாஜக-வில் இருந்து விலகுவதாக நான் எப்போது கூறினேன் என்று ஜெயக்குமார் கூட பேட்டி அளித்துள்ளார். எனவே, இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.
கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, ஜெயக்குமார் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது ஜெயக்குமார் 2022ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்று கிடைத்தது. அதைப் பார்த்த போது, அந்த பேட்டியிலிருந்து இந்த பதிவை உருவாக்கியிருப்பது தெரியவந்தது.
வீடியோவின் 1.40வது விநாடியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள காட்சிகள் வரத் தொடங்கியது. அதில், “செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா… வஞ்சகன் தினகரனடா” என்கிறார். பேட்டியை முழுமையாக பார்த்த போது ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயக்குமார் விமர்சித்து பேட்டி அளித்திருந்தது தெரியவந்தது.
ஜெயக்குமார் அளித்த பேட்டியை வைத்து ஊடகங்களில் வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை விமர்சித்து ஜெயக்குமார் பேட்டி அளித்திருந்தது இதன் மூலம் தெளிவானது. 2022ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து ஜெயக்குமார் அளித்த பேட்டியை எடிட் செய்து, பாஜக-வுடன் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததாக தவறாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக-வுடன் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமியை சேராத இடம் சேர்ந்தார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்ததாக பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
