நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி ஆ.ராசா பேசத் தெரியாமல் திணறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா பேசத் திணறியது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஏதோ பேச முயன்றது போலவும் அவரை அவைத் தலைவர் அமரச் சொன்னது போலவும் வீடியோ உள்ளது. வீடியோ மீது, "பாராளு மன்றத்தை அலறவிட்ட திராவிட ஆளுமை. Sir 1947 what happend, Sir 1953 is very important, மந்திரி ஜி... மந்திரி ஜி..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

18வது மக்களவையின் கூட்டம் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாகப் பேசினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரல் ஆனது.

இந்த நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசத் தெரியாமல் திணறியது போன்று வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர் அலறவிட்டாரா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இது முழுமையான வீடியோவா, உண்மையில் அவர் திணறினாரா என்று மட்டும் ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ஆ.ராசா-வுக்கு பின்புறம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளார். இவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதன் மூலம் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவானது.

எனவே, நாடாளுமன்ற யூடியூப் பக்கத்துக்குச் சென்று ஆ.ராசா என்று டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் உண்மையான வீடியோ நமக்குக் கிடைத்தது. 2023 டிசம்பர் 12ம் தேதி அந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 14 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் 12 நிமிடங்கள் வரை ஆ.ராசா பேசுகிறார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு இரண்டாவது சட்டத் திருத்த மசோதா (The Jammu and Kashmir Reorganisation (Second Amendment) Bill, 2023) தொடர்பாக ஆ.ராசா பேசியது தெரிந்தது. அதில் கடைசியில் ஆ.ராசாவின் உரையை முடிக்கும்படி அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகிறார். தொடர்ந்து ஆ.ராசா பேசவை, அடுத்ததாக அமைச்சரை பேச அழைத்தார்.

ஆ.ராசாவுக்கு பேச போதுமான நேரம் கொடுக்கப்பட்டது. அவரும் அந்த மசோதா தொடர்பாக விரிவாக பேசுகிறார். பேசத் தெரியாமல் அவர் தடுமாறவில்லை. முழுமையான வீடியோவை வெளியிடாமல், குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டுள்ளனர். இதனால் ஆ.ராசா திணறியது போன்ற அர்த்தத்தை இந்த பதிவு அளிக்கிறது. முழுமையான வீடியோவை வெளியிட்டிருந்தால் இது போன்ற குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்.

மேலும் இந்த வீடியோ 2024 ஜூன், ஜூலையில் எடுக்கப்பட்டதும் இல்லை. இது 2023 டிசம்பரில் நடந்தது. பழைய வீடியோவை இப்போது நடந்து போன்று பகிர்ந்திருப்பதன் மூலம் இது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2023ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேசிய போது கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டிவிட்டதாக கூறி ஆ.ராசாவின் பேச்சை சபாநாயகர் நிறுத்திய வீடியோவை 2024ல் இப்போது நடந்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்து வருகின்றனர் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நாடாளுமன்றத்தில் பேசத் தெரியாமல் திணறிய ஆ.ராசா என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered