தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த நிலையில் அறுந்து விழுந்த தேமுதிக கொடி என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த நிலையில் பாதி கொடிக் கம்பத்திலிருந்து தேமுதிக கொடி அறுந்து விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தேமுதிக கொடிக்கம்பத்திலிருந்து அக்கட்சியின் கொடி அறுந்து விழும் வீடியோவுடன் ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு மாடல் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பாதி கம்பத்தில் அறுந்து விழுந்த கொடி. தேமுதிக அலுவலகத்தில் பரபரப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சகுனம் சரியாக இருக்கிறது..🙄☹️. பாதிக்கம்பத்தில் அறுந்து விழுந்த தேமுதிக கட்சி கொடி.  திமுக துரோகிகளுடன் கூட்டணி வைத்த துரோகம்  #பேரம்லதா!🖤❤️ #கேப்டன்_ஆன்மா_மன்னக்காது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்த வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கூட்டணியை விமர்சித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்றெல்லாம் சாபம் அளிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கூட்டணி அமைத்த பிறகு கட்சி அலுவலகத்திலிருந்த கொடிக் கம்பத்திலிருந்து கட்சியின் கொடி அறுந்து விழுந்ததாகவும் தி.மு.க கூட்டணி தோல்வி அடைய சகுனம் சரியாக உள்ளது என்றும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், கூட்டணி அமைந்த பிறகு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. மேலும், இந்த வீடியோவை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த நினைவு இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவில் NewsTamil 24X7 லோகோ இருந்ததால் அந்த ஊடகத்தின் யூடியூப் பக்கத்திற்கு சென்று தேடிப் பார்த்தோம். அப்போது இந்த வீடியோவை 2024ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அது மட்டுமின்றி வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதாவது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க போட்டியிட்டது. அந்த தேர்தலில் ஒரு தொகுதியிலும் கூட தே.மு.தி.க-வால் வெற்றி பெற முடியவில்லை. கூட்டணிக்கு தலைமை ஏற்ற அ.தி.மு.க-வால் கூட அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அதன் பிறகு இப்போது 2026ல் தான் தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்துள்ளது. இதன் மூலம் தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்த பிறகு அக்கட்சியின் கொடி, அக்கட்சியின் அலுவலகத்திலிருந்த கொடிக் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

2024ம் ஆண்டு கொடிக் கம்பத்தில் இருந்து தேமுதிக கொடி அறுந்து விழுந்த வீடியோவை 2026ல் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள சூழலில் தற்போது நடந்தது போன்று தவறாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Avatar

Title:தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த நிலையில் அறுந்து விழுந்த தேமுதிக கொடி என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply