
ஈரானில் உள்நாட்டு பிரச்னை தீவிரமாக உள்ள சூழலில், அங்கிருந்த இஸ்லாமியர்களை பிரதமர் நரேந்திர மோடி மீட்டார் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமியப் பெண்கள் மற்றும் சிலர் விமானநிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிலிருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து பாரத மண்ணை தொட்டு வணங்கிய முஸ்லீம்கள்….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக ஈரான் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ந்தேதி முதல் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், ஈரானில் இருந்து முஸ்லிம்களை மோடி மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரவே, குழப்பத்தை ஏற்படுத்தியது.
பொதுவாக வெளிநாடுகளில் பிரச்னை என்றால் அங்குள்ள இந்தியர்களைத்தான் இந்திய அரசு அழைத்து வரும். மத அடிப்படையில் யாரையும் இந்திய அரசு அழைத்து வராது. ஈரான் என்பது முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடு. அங்கிருக்கும் இஸ்லாமியர்களை ஏன் இந்தியாவுக்கு மோடி அழைத்து வர வேண்டும். அதுவும் ஈரானில் உள்நாட்டு கலவரம் நீடித்துக்கொண்டிருக்கும் சூழலில் இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது, 2025ம் ஆண்டு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது அங்கு இருந்த இந்தியர்களை இந்திய அரசு மீட்டு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிந்தது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை இணையதளத்தில் தேடினோம். அதில், இஸ்ரேல் – ஈரான் மோதலைத் தொடர்ந்து ஜூன் 18, 2025 அன்று ஈரான் மற்றும் இஸ்ரேல் பகுதியில் 19 சிறப்பு விமானங்கள் மூலம் 4415 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுடன் 9 நேபாளிகள், 4 இலங்கை குடி மக்களும் அழைத்து வரப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive
இது தொடர்பாக வௌியான செய்திகளில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்களின் சிலர் ஈரானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படித்து வந்தனர். அவர்களில் பலரும் காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தெலங்கானா மாநிலத்தைச் சார்ந்தவர்கள் கூட மீட்கப்பட்டதாக செய்திகள் கிடைத்தன.
இந்த செய்தியைத் திரித்து, ஈரானிலிருந்து இஸ்லாமியர்களைக் கூட மத்திய பாஜக அரசு அழைத்து வந்துள்ளது என்பது போன்று மிகவும் கருணையுடன் நடந்து கொண்டது போன்று பதிவிட்டுள்ளனர். பிரச்னை நடக்கும் இடங்களிலிருந்து இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது இந்திய நாட்டின் கடமை. மதம் அடிப்படையில் இதைப் பிரித்துப் பார்த்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது. 2025 ஜூன் மாத செய்தியை, 2026 ஜனவரியில் ஈரானில் உள்நாட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கும் சூழலில் தவறாகப் பதிவிட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
முடிவு:
2025ம் ஆண்டு இஸ்ரேல் தாக்குதலின் போது ஈரானில் இருந்து மீட்டு வரப்பட்ட இந்தியர்கள் வீடியோவை இப்போது ஈரானில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ள சூழலில் புதிதாக நடந்தது போன்று அர்த்தம் ஏற்படும் வகையில் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“ஈரானில் இருந்து மீட்டதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்த முஸ்லீம்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


