
‘’குஜராத்தில் ஆம்புலன்ஸ் வசதியின்றி கொரோனா பாதித்து உயிரிழந்த தந்தையின் சடலத்தை கைகளால் சுமந்து செல்லும் மகள்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண்கள் சடலம் ஒன்றை கதறி அழுதபடி சுமந்துசெல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குஜராத் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தன் தந்தையின் பிணத்தை தூக்கிச் செல்லும் இறந்தவரின் மகள்கள்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், மக்கள் பல இடங்களிலும் மரணமடைவது தடுக்க முடியாத நிகழ்வாக மாறியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன என்று பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகிறது.
இத்தகைய சூழலில், பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் (முன்னர் மோடி முதலமைச்சராக இருந்த மாநிலம்) கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிக்க போதிய மயானங்கள் இல்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ், உள்ளிட்ட மருத்துவ வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை மையமாக வைத்து, சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் பலவும் தவறாகவே உள்ளன. இதன்பேரில் நாமும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, உண்மையை வெளியிட்டு வருகிறோம்.
ஆனால், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம், இது 2020ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகும். இதற்கும், குஜராத் மாநிலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
2020 மார்ச் மாதம் 25ம் தேதி முதலாக, இந்தியா முழுக்க கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020 ஏப்ரல் மாதத்தில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் பகுதியில் காசநோய் பாதித்து, சஞ்சய் குமார் (45) என்பவர் உயிரிழந்தார். இவரது சடலத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் அல்லது எந்த வாகன வசதியோ கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவரது சடலத்தை அவரது மகள்கள் மற்றும் உறவினர்களே தோளில் சுமந்து எடுத்துச் சென்றனர்.
இந்த நிகழ்வு அப்போதே ஊடகங்களில் வெளியாகி, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. உரிய வாகன வசதி கூட செய்து தராமல், கொரோனா ஊரடங்கு என்ற பெயரில் மக்களை வதைப்பதாகவும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்த உண்மை தெரியாமல், 2020ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் காசநோய் பாதித்து உயிரிழந்தவரின் சடல புகைப்படத்தை எடுத்து, 2021ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர் என்று கூறி வதந்தி பரப்பி வருகிறார்கள்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:குஜராத்தில் ஆம்புலன்ஸ் வசதி இன்றி தந்தையின் சடலம் சுமந்து சென்ற மகள்கள்- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
