FACT CHECK: குஜராத் கொரோனா கொடூர காட்சிகள் என்று பகிரப்படும் வேறு மாநில புகைப்படங்கள்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குஜராத்தின் மாடல் இதுதான் என்று மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு பேர் ஆக்சிஜன் மாஸ்க் உடன் படுத்திருப்பது, சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவை குஜராத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் போட்டபடி இரண்டு பேர் ஒரே படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் மற்றும் சுடுகாட்டில் வரிசையாக பிணங்கள் எரிக்கப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் மாடல் இதுதான்! ஒரேபடுக்கையில் இருவருக்கு சிகிச்சை! வயல் வெளியில் பினங்கள் எரிப்பு! இடப்பற்றாக்குறை! இதுதான் சங்கிகள் சொல்லும் மோடியின் பொற்கால ஆட்சி!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை நஜீர் அலி என்பவர் 2021 ஏப்ரல் 15 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு மருத்துவமனைகள் திணறி வருகின்றன. ஒரே படுக்கையில் மூன்று நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் எல்லாம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க கூட போதுமான இடம் இன்றி திறந்த வெளிகளில் எல்லாம் உடல் எரிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இந்த புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம். முதலில் இரண்டு பேர் ஒரு படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது என்று reuters.com வெளியிட்டிருந்த செய்தி மற்றும் புகைப்படம் நமக்கு கிடைத்தது. இந்த புகைப்படத்தை reuters.com புகைப்பட கலைஞர் எடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் அந்த புகைப்படம் டெல்லியில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: reuters.com I Archive

இரண்டாவதாக பிணங்கள் எரிக்கப்படும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள கொரோனாவால் உயிரிழந்த இந்துக்களின் உடலை எரிக்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே இடமான பட்பாதா விஷ்ரம்காட் என்று குறிப்பிட்டு பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் இந்த படமும் குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: bhaskar.com I Archive 1 I news18.com I Archive 2

இதன் அடிப்படையில், குஜராத் மாடல் என்று இதுதான் என்று பகிரப்படும் படங்கள் குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குஜராத்தில் வழங்கப்படும் சிகிச்சை மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு நடைபெறும் காட்சி என்று பகிரப்படும் படங்கள் டெல்லி, மத்திய பிரதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:குஜராத் கொரோனா கொடூர காட்சிகள் என்று பகிரப்படும் வேறு மாநில புகைப்படங்கள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False