
‘’சாமி சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் மூடர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
இதில், சாமி சிலைகள் வரிசையாக படுக்கையில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’குரோனாவால் பாதிக்கப்பட்ட சாமி சிலைகளுக்கு மருத்துவம்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப் மூலமாக நம்மை தொடர்பு கொண்டு, உண்மையா என்று விளக்கம் கேட்டிருந்தனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் தற்போதைய கொரோனா நிகழ்வுடன் தொடர்புடையது அல்ல. அத்துடன், இது இந்தியாவில் எடுக்கப்பட்டதும் கிடையாது. ரஷ்யாவைச் சேர்ந்த சமூக வலைதளங்களில் இந்த வீடியோ கடந்த 2019ம் ஆண்டு முதல் பகிரப்பட்டு வருகிறது.
இதே வீடியோ யூடியுப்பில் கூட பதிவேற்றப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
இதில், சாமி சிலைகளின் அருகே ஒருவர் அமர்ந்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நபர்தான், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள ஸ்கிரின்ஷாட்டிலும் இடம்பெற்றுள்ளார்.
மேலும், இந்த வீடியோவின் தலைப்பில் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ள Даршан Шри Панча-Таттвы на отдыхе என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்த்தோம்.
இதன்படி, Darshan of Sri Pancha Tattva on Vacation என்றால் என்னவென்று, கூகுளில் தகவல் தேடிப் பார்த்தோம். அப்போது, நமக்கு நிறைய வீடியோ சுட்டிகள் கிடைத்தன. அவற்றில் ரஷ்ய மொழியில் மேற்கண்ட புகைப்படங்களில் இருக்கும் நபர் பேசும் வீடியோவும் காணக் கிடைத்தது. அதனை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ரஷ்யாவில் இத்தகைய மத நிகழ்ச்சிகள் Hare Rama Hare Krishna என்ற பக்தி இயக்கம் சார்ந்து நடத்தப்படுவதாக, தெரியவருகிறது. அத்துடன், இந்தியாவிலும் Darshan of Sri Pancha Tattva என்ற பெயரில் கிருஷ்ணரின் ஐந்து
விதமான தோற்றங்களை சிலையாக வடித்து வழிபாடு செய்கிறார்கள் என்றும் தெரியவருகிறது.
எனவே, நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்திற்கும், தற்போதைய கொரோனா நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாகிறது. பழைய வீடியோ மற்றும் புகைப்பட காட்சியை சிலர் எடுத்து, தற்போது டிரெண்டிங் செய்து வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் புகைப்படம் பற்றிய தகவல் தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.
