
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.40 லட்சம் காப்பீடு தொகை உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை… அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை…! இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்… சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை கேட்டு உரிமை கோருவதில்லை!,
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும் அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்… இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!
சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்…. சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!(இதை உங்கள் சுவற்றிலும் பகிருங்கள் அனைவரும் அறிந்து கொள்ளட்டுமே) Call: 1800 2 333 555” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை RTI Act/public grievances தகவல் அறியும் உரிமை சட்டம்/மக்கள் புகார் பெட்டி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தல ரசிகன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூன் 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். இதன் அசல் பதிவை தேடி எடுத்தோம். அது 2016ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
உண்மை அறிவோம்:
ஒவ்வொரு எல்.பி.சி சிலிண்டர் வாடிக்கையாளர் பெயரிலும் 40 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு உள்ளது என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவின் கடைசிப் பகுதியில் 50 லட்ச ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும் என்று இருந்தது. காப்பீடு அளிக்கப்பட்டதே 40 லட்சத்துக்கு என்றால் எப்படி 50 லட்சம் வரை இழப்பீடு வாங்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த தகவல் உண்மையானதா என்று ஆய்வு செய்தோம்.
கூகுளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விபத்து காப்பீடு என்று டைப் செய்து தேடினோம். அப்போது, எல்பிசி சிலிண்டர் நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு தொடர்பான அறிவிப்பு, அதை அடிப்படையாக வைத்து வெளியான செய்தி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட சிலிண்டர் விபத்து காப்பீடு தொடர்பான அறிவிப்பு நமக்கு கிடைத்தன.

அசல் பதிவைக் காண: mylpg.in I Archive
முதலில் சிலிண்டர் விபத்து தொடர்பாக வழங்கப்படும் காப்பீடு தொடர்பாக இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு தொடர்பான அறிவிப்பைப் பார்த்தோம்.
அதில், “சிலிண்டர் காப்பீடு தொடர்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து ப்ரீமியம் தொகை வசூலிக்கப்படுவது இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் சிலிண்டர் வாங்கும்போது அதனுடன் சேர்த்து காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தி வருகிறோம் என்ற தகவல் தவறானது என்று உறுதியானது.
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு, உயிரிழந்தவர்களுக்கு, பொருட் சோதத்துக்கு எவ்வளவு என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் திருத்தப்பட்ட இழப்பீடு குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில்,
- “உயிரிழப்பு ஏற்பட்டால் நபர் ஒருவருக்கு 6 லட்சம் வழங்கப்படும்.
- விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஒட்டு மொத்தத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் வரை மருத்துவ செலவுக்கு நிதி உதவி வழங்கப்படும். இதில் ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு லட்சம் வரை மட்டுமே வழங்கப்படும்.
- பொருட்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஒரு விபத்துக்கு அதிகபட்சமாக இரண்டு லட்சம் மட்டுமே வழங்கப்படும். அதுவும் விபத்து வாடிக்கையாளர் பதிவு செய்த முகவரியில் நிகழ்ந்திருந்தால் மட்டுமே வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: pib.gov.in I Archive 1 I pib.gov.in I Archive 2
மேலும் வாடிக்கையாளர்கள் பெயரில் காப்பீடு எடுக்கப்படுவது இல்லை. எண்ணெய் விநியோக நிறுவனங்கள் இணைந்து குழு காப்பீட்டு பாலிசியை எடுக்கின்றன. அந்த நிறுவனங்களில் பதிவு பெற்ற வாடிக்கையாளர்கள் தீ விபத்து ஏற்பட்டால் இந்த காப்பீட்டின் மூலம் நிதி உதவி பெறலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது, பாரத் கேஸ் இணையதளத்தில் வெளியான எல்பிஜி சிலிண்டர் தீ விபத்து காப்பீடு பற்றிய தகவல் கிடைத்தது. இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் இணைந்து அந்த காப்பீட்டை எடுத்திருந்தன. அதில், ஒரு விபத்து நிகழ்வுக்கு அதிகபட்சம் 75 லட்சமும், ஒரு நபருக்கு அதிகபட்சம் 10 லட்சம் வரையிலும் நிதி உதவி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: my.ebharatgas.comI Archive
மேலும் வீடுகள், விநியோக மையங்கள், சிலிண்டர் கொண்டு செல்லும் போது ஏற்படும் விபத்து, கேஸ் நிரப்பும்போது ஏற்படும் விபத்து என அனைத்துக்கும் சேர்த்து இந்த காப்பீடு பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஒரு விபத்துக்கு அதிக பட்சம் ரூ.75 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்றால் அதில் உயிரிழப்பு, காயம், பொருட்கள் சேதம் எல்லாம் உள்ளடக்கியதாக இருக்கும்.
எல்பிஜி சிலிண்டர் வெடி விபத்தில் சிக்கியவர்கள் எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற முடியும் என்பது உண்மைதான். ஆனால், வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் 40 லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
ஒரு சிலிண்டர் விபத்துக்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை இழப்பீடு கோரலாம் என்பது இந்த ஃபேஸ்புக் பதிவு முதன் முதலில் 2016ம் ஆண்டு வெளியான போது சரியானதாக இருந்திருக்கலாம். ஆனால், 2021ல் இழப்பீடு ரூ.75 லட்சம் வரை கோரலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.6 லட்சமும், காயம் காரணமாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சமும், பொருட்கள் சேதாரத்துக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மட்டுமே பெற முடியும் என்று காப்பீட்டு விதிகள் தெரிவிக்கின்றன.
புதிய மாற்றங்களை தெரிந்து திருத்தம் செய்யாமல் 2016ம் ஆண்டு வெளியிட்ட பதிவை 2021ல் அப்படியே வெளியிட்டிருப்பது தவறானதாக மாறிவிட்டது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் சில தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் பெயரில் ரூ.40 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Title:சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர் பெயரில் ரூ.40 லட்சம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
