அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்?

அரசியல் சமூக ஊடகம்

உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும் அதில், இந்தியாவிலிருந்து இடம் பிடித்தது மட்டுமின்றி முதலிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Honest 2.png
Facebook LinkArchived Link

Sheik Uduman என்பவர் மன்மோகன் சிங் படத்துடன் வெளியிட்டிருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 நபர்களின் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டது. இதில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் டாக்டர் மன்மோகன்சிங் மட்டுமே, அதுவும் முதல் இடத்தில். இந்தியாவின் பொருளாதாரத்தை எந்த ஒரு பொருளாதார மந்த நிலைமையிலும் கட்டுக்குள் வைத்திருந்தவர்” என்று இருந்தது.

இந்த பதிவை மக்கள் நேசன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் படித்ததில் பிடித்தது என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகின் நேர்மையான நபர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். எந்த ஆண்டு, எந்த பிரிவில் இந்த பட்டியல் வெளியானது என்று குறிப்பிடவில்லை. மேலும் அமெரிக்க அரசு வெளியிட்டதா அல்லது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ், ஃபோர்ப்ஸ் போன்ற ஊடகங்கள் வெளியிட்டதா என்றும் குறிப்பிடவில்லை. அமெரிக்க அரசு வெளியிட்டதாக இருந்தால், தன்னுடைய நாட்டுத் தலைவரின் நேர்மையையே அது சந்தேகிக்கின்றதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் டாப் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், வலிமைமிக்க தலைவர்கள், அரசியல்வாதிகள், பணக்கார விளையாட்டு வீரர்கள் என்று பட்டியல் வெளியாகும். ஆனால், பிரபலங்களின் நேர்மையை விமர்சிப்பது பெரும் பிரச்னையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. 

ஒருவேளை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை டாப் 50 நேர்மையான தலைவர்கள் என்று பட்டியலை ஏதும் வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு பட்டியலும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில், 2018ம் ஆண்டின் உலகின் வலிமையான தலைவர்கள் பட்டியலை அது வெளியிட்டிருந்தது கிடைத்தது. முதல் இடம் சீன அதிபருக்கு வழங்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடிக்கு 9வது இடம் கொடுக்கப்பட்டு இருந்தது.

Search Linkforbes.comArchived Link

தொடர்ந்து தேடியபோது, உலகின் நம்பர் ஒன் நேர்மையான தலைவர் மன்மோகன் சிங் என்று சமூக ஊடகங்களில் பரவுவதைப் போல, சில மாதங்களுக்கு முன்பு நம்பர் ஒன் நேர்மையான தலைவர் மோடி என்று அறிவித்த அமெரிக்கா என்று ஒரு தகவல் இந்தி, ஆங்கிலத்தில் பரவியது தெரியவந்தது. அந்த தகவல் உண்மையா என்று பல ஆய்வுகள் வெளியாகி இருந்ததும் நமக்கு கிடைத்தது. அதில், நேர்மையான தலைவர்கள் பட்டியில் மோடி இடம் பெற்றுள்ளார் என்று வெளியான தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

மோடியைப் போலவே, மன்மோகன் சிங் பெயரை அறிவித்த அமெரிக்கா என்று எதிர் தரப்பினரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததும் நமக்கு தெரியவந்தது. அதில், அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவின் ஆட்சியின் கடைசி ஆண்டு நடந்த 14வது மற்றும் இறுதி ஃபார்மல் ஸ்டேட் அரைவல் செரிமனி எனப்படும் வெள்ளை மாளிகைக்கு வருகைதரும் சர்வதேச தலைவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு மற்றும் விருந்து உபசார நிகழ்ச்சியின் போது வெளியான புகைப்படங்கள் அடிப்படையில் வதந்தி பரப்பியதாக குறிப்பிட்டு இருந்தனர். 

ஜனாதிபதியாக ஒபாமா அளிக்கும் கடைசி விருந்து என்பதால், ஒபாமா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற விருந்து மற்றும் விருந்தினர்கள் படங்களை ஒபாமாவின் புகைப்பட கலைஞர் வெளியிட்டிருந்தார். அதில், ஒபாமா ஜனாதிபதி பதவி ஏற்றதற்குப் பிறகு முதன் முறையாக வரவேற்ற நாட்டுத் தலைவர் என்ற வகையில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் படத்துக்கு முதலிடம் கொடுத்திருந்தார். அந்த புகைப்பட வரிசையில் மோடியின் புகைப்படம் இல்லை. இதன் அடிப்படையில் அப்போதே வதந்தி கிளம்பியது. அந்த படங்களை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

indianexpress.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியல் என்று ஒன்று இதுவரை வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட வலிமையான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு 9வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மன்மோகன் சிங் இல்லை.

தொடர்ந்து இந்த வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும், அது தவறான தகவல் என்றும் பல கட்டுரைகள் வெளியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

2016ம் ஆண்டு ஒபாமாவின் புகைப்படக் கலைஞர் வெளியிட்ட விருந்தினர்கள் புகைப்படங்கள் தொகுப்பைத் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதும் உறுதுி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங் பெயர் உள்ளது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்?

  1. உங்களது உண்மையா என்ற கண்டு பிடிப்புக்கு வாழ்த்துகள், ஏன் இவைகளை எனது
    நான் வேலை பார்க்கும் பிரபல செய்தித்தாளில் முதலில் அனுப்புவரே செய்திக்கு பொறுப்பு! அதேபோல் ஏன் நீங்கள் செய்யக்கூடாது? நாலைந்து நாள் கழித்து கண்டு பிடிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை?

Comments are closed.