
‘’டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருகிறார்கள். பணம் தராததால் சண்டையிடும் விவசாயிகள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த வீடியோவில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவர்களை ‘’டெல்லி விவசாயி போராட்டத்தில் பங்கேற்றவர்கள்; பேட்டா ரூ.350 தரவில்லை என்பதால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்,’’ எனக் குறிப்பிட்டு, ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்துள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: various Facebook posts with similar narrative
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை ஒருமுறை உற்று பார்த்தாலே, அவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் என்று தெளிவாக தெரிகிறது. அத்துடன், டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் அக்கட்சியினரும் பங்கேற்க வாய்ப்பு மிகக் குறைவு. அவர்களின் ஆடையில் கூட ஆம் ஆத்மி பெயரும், அர்விந்த கெஜ்ரிவால் உருவமும் இடம்பெற்றுள்ளது.

ஆனால், தற்போது டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகள் பலரும் சீக்கியர்கள் என்பதோடு, அவர்கள் பலரும் இடதுசாரி சார்பான அரசியல் கட்சித் தொண்டர்களும் ஆவர்.
எனவே, குறிப்பிட்ட வீடியோ காட்சியில் உள்ளதுபோல, பணம் தருவதாக ஆம் ஆத்மி தொண்டர்கள், விவசாயி போராட்டத்திற்கு அழைத்து வரப்பட்டனரா என விவரம் தேட தொடங்கினோம். அப்போது, இந்த வீடியோ 2018ம் ஆண்டு முதல் இணையதளத்தில் பகிரப்பட்டு வருவதாக, விவரம் கிடைத்தது.
இதன்படி, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக, அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஹரியானாவில் உள்ள ஹிசார் பகுதியில் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக, அக்கட்சித் தொண்டர்கள் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டதாகவும், பலருக்கு பேசிய தொகை தரப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வீடியோதான் இது.
இதுதொடர்பாக, ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது.
எனவே, 2018ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தொடர்பான வீடியோ ஒன்றை தற்போதைய டெல்லி விவசாயிகள் போராட்ட நிகழ்வுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருவதாகப் பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
