
வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ரயில் இன்ஜினில் ராமர் படம் மற்றும் ஶ்ரீராம் என்று எழுதப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் வந்தே பாரத் என்று எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”கோமாளி கூட்டத்தின் பைத்தியக்கார அரசியல்…,
இவனுங்கள விரட்டி அடித்தே ஆகனும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் மற்றும் ஶ்ரீராம் என்று எழுதப்பட்டுள்ளது என்று புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வந்தே பாரத் என்று இந்தியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரயிலைப் பார்க்க வந்தே பாரத் ரயில் போல இல்லை. அதன் இன்ஜின் முழுக்க வழக்கமான ரயில் இன்ஜின் போல உள்ளது. அதே போல் நிறமும் வந்தே பாரத் ரயிலில் உள்ளது போல இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த புகைப்படத்தை ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது, சமூக ஊடகங்களில் பலரும் இந்த புகைப்படத்தை பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. the_rail_pilot_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே போன்று சிவபெருமான், அப்துல் கலாம், விராட் கோலி, தோனி உள்ளிட்ட பலரின் புகைப்படங்களுடன் ரயில் இன்ஜின் இருப்பது போன்று புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் பார்த்தோம். அதில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
இது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தித்தான் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிசெய்துகொள்ள இதற்காக உள்ள இணையதளங்களில் இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து பார்த்தோம். அவற்றிலும் இது முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற முடிவு நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் வந்தே பாரத் ரயிலில் ராமர் புகைப்படம் என்று பரவும் புகைப்படம் உண்மையில்லை என்பதை உறுதி செய்தன.
முடிவு:
வந்தே பாரத் ரயில் இன்ஜினில் ராமர் புகைப்படம் என்று பரவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered
