
சொந்த ஊர் திரும்பும் வட இந்தியர்கள் ரயில் ஏறிய நிலையில் கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி வீசியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ரயில் நிலையத்தை ரயில் கடக்கிறது. நடைமேடையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடக்கின்றன. ரயிலில் உள்ளவர்கள் போராட்டக் குரல் எழுப்புகின்றனர். வீடியோவை எடுத்தவர் ஏதோ சொல்கிறார். ஆனால் அது புரியவில்லை.
நிலைத் தகவலில், “உணவு கொடுத்து அனுப்பிய கேரள அரசு வண்டி ஏறியவுடன் திமிரைக் காட்டும் வடநாட்டு முட்டாள் பயல்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை AR Ishak Ali என்பவர் 2020 மே 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வட இந்திய தொழிலாளர்களின் திமிர் என்று பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். தொழிலாளர்களை ரயிலில் ஏற்றும்போது அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டே ஏற்றப்பட்டனர். ஆனால், இந்த வீடியோவைப் பார்க்கும்போது வழியில் உணவு கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டது போல உள்ளது. எனவே, உண்மையில் கேரளாவில் இந்த சம்பவம் நடந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
முதலில், ரயில் நிலையத்தில் உணவுகளை வீசி எறிந்த தொழிலாளர்கள் என்று டைப் செய்து செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். செய்தி ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட வீடியோ கிடைத்தது.
டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியைப் பார்த்தோம். அதில் மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் ரயில் நிலையத்தில் இது நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் கேரளாவில் இருந்து தானாபூருக்கு இந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது. பயணிகள் யாரும் நடுவில் எங்கும் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு வழங்குவதற்காக மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் ரயில் நிலையத்தில் தொழிலாளர்கள் வந்த ரயில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
உணவு கொடுக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் பயணிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கெட்டுப்போன உணவு கொடுக்கப்பட்டதாக கூறி ஜன்னல் வழியாக உணவை வீசி எறிந்தனர். இந்த உணவு கெட்டுப்போய் சாப்பிட ஏதுவாக இல்லை என்று புகார் கூறிய பயணிகள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கேரளாவில் புறப்பட்டு வழியில் எங்கும் இதுபோன்று கெட்டுப்போன உணவு பிரச்னையை சந்திக்கவில்லை. அசன்சோலில்தான் இந்திய ரயில்வே இப்படி கெட்டுப்போன உணவை வழங்கியுள்ளது” என்று பயணிகள் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகளும் டைம்ஸ் நவ் வீடியோவில் இடம் பெற்றிருந்தது.

கேரள அரசைக் குற்றம்சாட்டி பலரும் பதிவிட்டு வருவதால் இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது ஏற்கனவே நமக்கு கிடைத்த டைம்ஸ் நவ் விடியோவோடு சமயம் மலையாளம் வெளியிட்ட வீடியோ ஒன்றும் கிடைத்தது. அதிலும், இந்த சம்பவம் அசன்சோலில் நடந்தது என்றும், இவர்கள் கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்றவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
வீடியோவில் பேசுபவர் என்ன சொல்கிறார் என்று அறிய நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர்கள், “நீங்கள் உங்கள் பணியை செய்கின்றீர்கள், ஆனால் நாங்கள் உணவின்றி இறந்து வருகிறோம். எங்களுக்கு வழங்கப்பட்ட உணவின் நிலையைப் பாருங்கள். அனைத்து பயணிகளும் உணவை வீறி எறிந்துள்ளனர். இந்த அரசு எதையும் செய்யவில்லை. கோபமடைந்த பயணிகள் அசன்சோல் நிர்வாகத்துக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். இதுதான் இந்திய ரயில்வே கட்டமைப்பின் நிலை” என்று மொழி மாற்றம் செய்து கொடுத்தனர்.
‘வீடியோவில் பேசும் நபர் அசன்சோல் நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?,’ என்று கேட்டோம். ‘’ஆம், அவர் அசன்சோல் என்று குறிப்பிடுகிறார்” என்றனர். மீண்டும் ஒரு முறை அந்த வீடியோவைப் பார்த்தோம். 51வது விநாடி அசன்சோல் முர்தாபாத் என்று கூறுவதைக் கேட்க முடிந்தது.
நம்முடைய தேடலில் ட்விட்டரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட பதிவு கிடைத்தது. அதில்,”மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் இடம் பெயர் தொழிலாளர்களுக்கு கெட்டுப்போன உணவை வழங்கியதால், அதை அவர்கள் தூக்கி எறிந்து போராடினார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் உணவை வீணடிக்கும் இடம் பெயர் தொழிலாளர்கள் என்று தவறான தகவல் பரப்பி வருகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கேரள அரசு வழங்கிய உணவு சரியில்லை என்று பிளாட்ஃபார்மில் தூக்கிய வீசிய வட இந்திய தொழிலாளர்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி எறிந்த வட இந்திய தொழிலாளர்கள்… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
