
இமயமலையில் வாழும் அதிசய ரோஜா பூ போன்று காட்சி அளிக்கும் பூச்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஒருவரின் கை விரலில் அமர்ந்த பூச்சி ஒன்று தன் சிறகுகளை விரிக்க அது ரோஜா மலர் போல் மாறுகிறது. நிலைத் தகவலில், “இறைவன் படைப்பில் தான் எத்தனை அதிசயம்
இது இமயமலையில் வாழும் ஒரு அதிசய பூச்சி ஆகும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இமயமலையில் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர் என்று வதந்தி பரப்பி வந்தனர். தற்போது, பூச்சி ஒன்று ரோஜா மலர் போல் இருக்கிறது என்று ஏஐ வீடியோவை வைத்து வதந்தி பரப்பி வருகின்றனர். உண்மையில் இப்படி அதிசய பூச்சி இருந்திருந்தால் அது பற்றி ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் இருந்திருக்கும். ஏராளமானவர்கள் அப்படிப்பட்ட பூச்சியை வளர்க்கவே ஆரம்பித்திருப்பார்கள்.
இது போலியானது என்பது நமக்குத் தெரிகிறது. ஆனாலும் இதையும் இமயமலையில் வாழும் அதிசய பூச்சி என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கவே, உண்மையில் முதலில் இதை யார் வெளியிட்டது என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. தொடர்ந்து தேடிய போது, oleg.pars என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2025 மார்ச் 18ம் தேதி ஒருவர் பதிவு வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அவருக்கு முன்பாக யாரும் இந்த பதிவை வெளியிடவில்லை.
அந்த பதிவில் அது உண்மையான பூச்சி என்பது போலவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவற்றுக்குக் கீழே, Flux, Midjourney, Kling, Aftereffects, Elevenlabs என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், After Effects என்பது Adobe-ன் புகைப்படங்களை உருவாக்கும் மென்பொருளாகும். மற்றவை பற்றித் தேடிய போது அவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு, புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்க பயன்படும் தளங்கள் என்பது தெரியவந்தது.
மேலும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ போன்று ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தன. பூச்சி, புழுக்கள் எல்லாம் மலர்களாக மாறுவது போன்று ஒரே மாதிரியாக அவை இருந்தன. எல்லா பதிவிலும் அவை உண்மையானவை என்பது போலவே பதிவிட்டிருந்தார். ஆனால், கீழே வீடியோவை தயாரிக்க உதவிய செயற்கை நுண்ணறிவு தளங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனவே, இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெளிவானது.
மேலும் தன்னைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில் Digital creator என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நம்ப முடியாத உயிரினங்களை தேடுபவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். கம்ப்யூட்டர் கோட்-களை உருவாக்க, திறக்கும் தொழில்நுட்பமான Cryptologis என்று தன்னை குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர் இவர் என்பது தெளிவாகிறது. இதன் மூலம் இப்படி பூச்சிக்களை வைத்து வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது.
முடிவு:
இமயமலையில் வாழும் ரோஜா மலர் போன்று மலரும் அதிசய பூச்சி என்று பரவும் வீடியோ உண்மையானது இல்லை, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“இமயமலையில் வாழும் ஒரு அதிசய பூச்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Altered
