தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள்: வைரல் செய்தியால் பரபரப்பு

அரசியல் சமூக ஊடகம்

‘’தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு இந்தியில் கல்வெட்டு பதிக்கிறார்கள்,’’ என்று கூறி, ஒரு வீடியோவும், அதுதொடர்பான பதிவுகளும் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. உண்மையில் அப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதைக் கண்டும் காணாது இருக்கும் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகமும்,தமிழக அரசும் . இனியும் தமிழன் அமைதி காத்தால் உன் பெருமைமிகு வரலாறும் கல்வெட்டும் காற்றோடு கரைந்து போகும். என்ன செய்யப் போகிறோம்.?

Archived Link

ஏப்ரல் 22ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழன், தமிழ் மொழி உணர்வு போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால், இது அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:
கடந்த சில வாரங்களாகவே, தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிக்கப்படுவதாகவும், தமிழின் அடையாளம் மறைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவும், அது சார்ந்த பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன. இதன்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது போல, வாட்ஸ்ஆப் வீடியோ ஒன்றும் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ பதிவு கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

ஆனால், இவர்கள் சொல்வது போல உண்மையிலேயே தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டு பதிக்கப்படுகிறதா என்ற கோணத்தில் ஆய்வை மேற்கொண்டோம். இதன்பேரில், கூகுளில் முதலில் ஏதேனும் செய்தி பதிவிடப்பட்டுள்ளதா என தேடினோம். அப்போது, விகடன், புதிய தலைமுறை, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து உள்ளிட்ட ஊடகங்கள் இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள விவரம் கிடைத்தது. ஆதார படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதன்படி, நமக்கு கிடைத்த செய்தி ஆதாரங்களை பார்வையிட்டபோது, தஞ்சை பெரியகோயிலில் இந்தி கல்வெட்டு எதுவும் பதிக்கப்படவில்லை என, தொல்லியல் துறை சார்பாக தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்தது.

வீடியோவில் குறிப்பிடப்படும் கல்வெட்டு எழுத்துகள், தேவநாகரி எழுத்துகள் என்றும், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் இந்த கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளன என்றும், தொல்லியல் துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டதாக, அந்த செய்தி ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ராஜ ராஜ சோழன் காலத்தில், தஞ்சை பெரிய கோயில் இப்போது இருப்பது போல கட்டப்படவில்லை. அதாவது, கருவறை, அதுசார்ந்த விமானம், கோயில் முன் மண்டபம், நுழைவாயில்கள், கோயில் சுற்றுப்பிரகாரம், சண்டீஸ்வரர் சந்நிதி போன்றவையே கட்டப்பட்டிருந்தன.   

சோழர்களுக்குப் பின் தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டியர்கள், பெரிய கோயில் வளாகத்தின் உள்ளேயே அம்மன் மண்டபம் ஒன்றை நிறுவினர். இதேபோல, நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் நந்தி மண்டபம், சுப்பிரமணியர் மற்றும் விநாயகர் சந்நிதி போன்றவை கட்டப்பட்டன. இதன்பேரில், இரண்டாம் சரபோஜி ஆட்சி செய்தபோது, தஞ்சை பெரிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இதன்பேரில், அப்போது கோயில் வளாகத்திற்குள் மராத்தி மொழியில் கல்வெட்டுகள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மராத்தி கல்வெட்டுகளைத்தான் தற்போது இந்தி கல்வெட்டுகள் எனக் கூறி, சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவதாக, ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இந்திய தொல்லியல்துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, வதந்திகளில் கூறப்படுவது போல, இந்தி கல்வெட்டுகள் கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலும் தவறான ஒன்றாகும். அவை தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரட்டப்பட்ட கல்வெட்டுகளாகும். முக்கிய தகவல்கள் உள்ள காரணத்தால், அவற்றை கோயில் வளாகத்திற்குள்ளேயே தனி இரும்புக்கூண்டு நிறுவி பாதுகாத்து வருவதாகவும் தொல்லியல் துறை அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியை படிக்க இங்கேயும், விகடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கேயும் கிளிக் செய்யுங்கள். இதேபோல, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி படிக்க இங்கேயும், தி இந்து செய்தியை படிக்க இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.

எனவே, உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும், அதுசார்ந்த வீடியோக்களிலும் கூறப்படுவதுபோல, தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டு எதுவும் பதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்படுகிறது. மராத்தி மொழியில் உள்ள கல்வெட்டை எடுத்து, தற்போது புதியதாக நிறுவியது போல சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள் எனவும் வாசகர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும், அது சார்ந்த வீடியோ பதிவுகளும் தவறானவை என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள்: வைரல் செய்தியால் பரபரப்பு

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •