மனிதனுடன் போட்டிப்போடும் ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

மனிதர்களுடன் பல துறைகளில் போட்டிப்போடும் வகையில் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் பல விளையாட்டுக்களை விளையாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதனை வெல்ல போகும் இயந்திரங்கள் வெகுவிரைவில். ஆச்சர்யம் தான். எமனிதனுக்கு வேலை இல்லை என்கிற காலம் விரைவில் வருவது மிக அருகில் என்றாலும். மனிதனுக்கு சரிக்கு சரி போட்டி போட ரோபோக்கள் வருகையின் காலம் வெகு தூரத்திலும் இல்லை என்பதற்கு இக்காணொளி ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Prem Pavithra என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 19ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மனிதனைப் போல செயல்படும் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அப்படி ஒரு முழுமையான மனித ரோபோ கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எனவே, இந்த வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

வீடியோவில் முதலில் சைக்கிள் ஓட்டும் ரோபோ வந்தது. அந்த காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு பலரும் அதைப் பகிர்ந்திருந்தனர். எனவே, அது பற்றித் தேடினோம். பல தேடலுக்குப் பிறகு உண்மையான வீடியோ நமக்குக் கிடைத்தது. அந்த விளையாட்டு பற்றிய தகவல் கண்டறிய முடியவில்லை. ஆனால், மனிதர் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்திருப்பதை ஏஐ மூலம் ரோபோ செய்வது போல மாற்றியிருப்பது தெளிவானது.

அடுத்தது டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். அந்த வீடியோவை புகைப்படமாக மாற்றித் தேடிய போது, அதுவும் ஏஐ வீடியோ என்று பலரும் பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து தேடிய போது மனிதர்கள் விளையாடிய உண்மையான விளையாட்டு வீடியோ கிடைத்தது. இதை எடிட் செய்திருப்பது தெளிவாகிறது.

மூன்றாவதாக ரோபோவுக்கும் மனிதருக்கும் கன்னத்தில் அறையும் போட்டி காட்சி வருகிறது. அதை புகைப்படமாக மாற்றித் தேடிய போது, உண்மையான வீடியோ கிடைத்தது. மனிதர்களுக்கு இடையே நடந்த கன்னத்தில் அரையும் போட்டி வீடியோவை எடிட் செய்திருப்பது தெளிவானது.

அடுத்ததாக பேட்மிட்டன் போட்டி காட்சி வருகிறது. அதை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2021 அக்டோபர் 21ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட உண்மையான வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் மனிதர்களுக்கு இடையே போட்டி நடக்கிறது.

அடுத்ததாக கூடைப்பந்து ஆட்டத்தை ரோபோ ஆடுவதாக காட்சி வருகிறது. அதன் உண்மை வீடியோவை கண்டறிய முடியவில்லை. ஆனால், இது ஏஐ வீடியோ என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்த பதிவுகள் நமக்கு கிடைத்தன. இப்படி அடுத்து அடுத்து வந்த வீடியோக்களும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. 

https://www.youtube.com/shorts/sAFTfCgF7_0

கடைசியாக இரண்டு ரோபோக்கள் நடனமாடும் காட்சி வந்தது. இந்த ரோபோ நடனம் பற்றி ஏற்கனவே நாம் ஆய்வு செய்திருந்தோம். இளையராஜா பாடலுக்கு ரோபோக்கள் நடனம் என்று முன்பு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய ரோபோ என்று தெரியவந்தது. 

இந்த ஒரு ரோபோ தவிர்த்து மற்ற காட்சிகள் எல்லாம் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது உறுதியாகிறது.

முடிவு:

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உண்மையான வீடியோ என தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மனிதனுடன் போட்டிப்போடும் ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False