விபூதி பூசியதால் பிரக்ஞானந்தாவின் சாதனையை மறைத்த திராவிட ஊடகங்கள்!- ஃபேஸ்புக் விஷமம்

சமூக ஊடகம் சமூகம் தமிழகம்

நெற்றியில் விபூதி போட்ட காரணத்தால் மும்பையில் நடந்த 18 வயதிற்குட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனையை திராவிட (தமிழ்) ஊடகங்கள் மறைத்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தின் பெயரில் திட்டமிட்டு மறைக்கப்படும் சாதனை சிறுவனின் புகழ். நெற்றியில் விபூதி போட்ட காரணத்தால் மும்பையில் நடைபெற்ற 18 வயதிற்குபட்டோருக்கான உலக செஸ் போட்டியில் வென்ற சென்னை சேர்ந்த 14 வயது சிறுவன் பிரயானந்தாவின் சாதனையை மறைக்கும் திராவிட ஊடகங்கள். மேலும் பல வெற்றிகள் குவித்து இந்தியாவுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Republic Tamil News என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Saivam Vaishnavam என்பவர் 2020 ஜூன் 5ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் சாதி, மத அடிப்படையில் எந்த ஒரு விளையாட்டு வீரரையும் ஊடகங்கள் பிரிப்பது இல்லை. தமிழக வீரர்களின் சாதனைகள் அனைத்தையும் ஊடகங்கள் கொண்டாடுகின்றன. அதுவும் போட்டி நிறைந்த ஊடகத் துறையில் ஒருவர் மிஸ் செய்தாலும் மற்றொருவர் ஸ்கோர் செய்துவிடுவார் என்பதால் போட்டிபோட்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சாதனையை திராவிட ஊடகங்கள் அதாவது தமிழ் ஊடகங்கள் மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு உள்ளது. எல்லா உள், வெளி அரங்க விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மும்பையில் எப்படி போட்டிகள் நடத்தப்பட்டன என்ற சந்தேகம் எழுந்தது. 18 வயதிற்குட்பட்டோருக்கான உலக செஸ் போட்டி எப்போது நடந்தது என்று பார்த்தோம். 2019 அக்டோபர் மாதம் மும்பையில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்ததும் அதில் பிரக்ஞானந்தா தங்கப் பதக்கம் வென்றதும் தெரிந்தது. 2019 அக்டோபரில் வெற்றி பெற்றதற்கு 2020 ஜூன் மாதம் செய்தி வெளியிடவில்லை என்று ஃபேஸ்புக் பதிவாளர் பொங்கியிருக்கிறார்.

scoopwhoop.comArchived Link

சரி, 2019 அக்டோபரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற செய்தியை தமிழ் ஊடகங்கள் எதுவும் வெளியிடவில்லையா என்று தேடினோம். அப்போது எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. அனைத்துக்கும் மேலாக தான் பெற்ற வெற்றியை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்துக்கு தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன் என்று பிரக்ஞானந்தா கூறிய பேட்டி முதற்கொண்டு அனைத்தும் கிடைத்தன. 

vikatan.comArchived Link 1
dinamani.comArchived Link 2
puthiyathalaimurai.comArchived Link 3

தங்கப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கும் செய்திகளும் கிடைத்தன. 

kalaignarseithigal.comArchived Link 1
nakkheeran.inArchived Link 2

அது மட்டுமின்றி, தொடர்ந்து பல ஆண்டுகளாகவே பிரக்ஞானந்தா தொடர்பான செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டு வந்திருப்பதையும் தங்கப் பதக்கம் வென்ற பிறகும் கூட அவர் பங்கேற்று வரும் போட்டிகள், அதில் அவர் பெற்ற வெற்றிகள் தொடர்பாக செய்திகள் வெளியாகி வந்திருப்பதைக் காண முடிந்தது. திராவிடக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள், திராவிடக் கட்சி ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. பிறகு எதன் அடிப்படையில் பிரக்ஞானந்தா பற்றிய செய்திகளை திராவிட ஊடகங்கள் மறைத்தன என்று குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. மக்கள் மத்தியில் மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பதிவை உருவாக்கியிருப்பது தெரிகிறது.

நம்முடைய ஆய்வில்,

பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2019 அக்டோபரில் வெற்றி பெற்ற போது அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த ஒரு வேற்றுமையையும் பாராமல் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவித்த தகவல் கிடைத்துள்ளது.

2019ல் பிரக்ஞானந்தா செஸ் போட்டியில் வெற்றி பெற்றதை வைத்து இப்போது எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை, அதற்கு சிறுவன் பிரக்ஞானந்தா நெற்றியில் வைத்திருந்த திருநீறு (விபூதி)தான் காரணம் என்று விஷமத்தனமான வதந்தி பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விபூதி பூசியதால் பிரக்ஞானந்தாவின் சாதனையை மறைத்த திராவிட ஊடகங்கள்!- ஃபேஸ்புக் விஷமம்

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False