
தி.மு.க வேட்பாளர் தேர்வில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் குனிந்து வணக்கம் தெரிவித்தார் என்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive
தி.மு.க வேட்பாளர் தேர்வுக் குழுவினர் முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வில் இருந்தபோது குனிந்து வணக்கம் வைத்தது போன்று புகைப்படம் ஒன்று threads.com-ல் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குனிந்தவன், திமுகவுக்கு வந்த எவனா இருந்தாலும் நிமிர்ந்து தான் நிற்பான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்துக் குனிந்து வணக்கம் சொல்லியது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. புகைப்படத்தைப் பார்க்க புதியது போல இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க-வில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் அந்த குழுவில் இருப்பது போல புகைப்படம் உள்ளது. எனவே, இது போலியானது என்பது தெரியவந்தது. எனவே, ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது, 2021ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் தி.மு.க தேர்வுக் குழு முன்பு ஆஜரான புகைப்படத்தை எடிட் செய்து ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்தை வைத்து வெளியிட்டிருப்பது தெரியவந்தது. உதயநிதி ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை ஏஎன்ஐ செய்தி ஊடகம் 2021ம் ஆண்டு வெளியிட்டிருந்தது.

தற்போது 2026ம் ஆண்டு தி.மு.க தேர்வுக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றது தொடர்பாக புகைப்படம் ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு புகைப்படமும் கிடைக்கவில்லை. 2021ம் ஆண்டு தி.மு.க வேட்பாளர் தேர்வுக் குழுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற புகைப்படத்தை எடிட் செய்து ஓ.பன்னீர்செல்வம் குனிந்து வணக்கம் செய்தது போன்று மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க வேட்பாளர் தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


