
‘’அர்னாப் கோஸ்வாமிக்கு சிறையில் முதலிரவு,’’ என்று கூறி அவர் நடத்தும் ரிபப்ளிக் டிவியில் செய்தி வெளியானதாக, சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்கின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டது பற்றி, அவருக்குச் சொந்தமான ரிபப்ளிக் டிவியில் ‘’அர்னாப்புக்கு சிறையில் முதலிரவு‘’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: FB posts on Arnab Goswami
உண்மை அறிவோம்:
வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, சர்ச்சைக்குரிய வகையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை நடத்துபவர் ஆவார். இவர் மீது பல தரப்பிலும் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் அதே சூழலில், அவருக்கு ஆதரவாகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பது உண்டு.
தனக்குள்ள செல்வாக்கு காரணமாக, அர்னாப் கோஸ்வாமி, ரிபப்ளிக் என்ற புதிய டிவி சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த சேனலில், இரவு தோறும் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் அவர் விவாதம் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை, புகார் ஒன்றின் பேரில் மும்பை போலீசார் அதிரடியாக, நவம்பர் 4, 2020 அன்று கைது செய்தனர்.
இதன்போது, போலீசார் தன்னை தாக்கியதாக, அர்னாப் கோஸ்வாமி புகார் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தை அவருக்குச் சொந்தமான ரிபப்ளிக் டிவியில் தீவிரமாக விவாதித்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான செய்தி ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #IndiaStandsWithArnab என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, அர்னாப்புக்கு ஆதரவாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இதன்போது, ரிபப்ளிக் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து, மேற்கண்டவாறு பலரும் போலிச் செய்தி பகிர்கின்றனர். உண்மையான நியூஸ் கார்டு கீழே தரப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை, அர்னாப் பற்றி ரிபப்ளிக் டிவி வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டையும், அதனை வைத்து பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் போலியான ஒன்று என ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அர்னாப் கோஸ்வாமி கைது பற்றி பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு!
Fact Check By: Pankaj IyerResult: Altered
