
“முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல ராமதாஸ்தான்” என்று பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ராமதாஸ் மற்றும் தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் படங்கள் உள்ளன. மேலும், “முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல ராம்தாஸ்தான். சட்டப்படி அவருக்குத்தான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் – சீனிவாசன் அந்தர் பல்டி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை, Savasaami Sivaa Sivaa என்பவர் Writer மொள்ளமாரி தாஸ் (மாரி தாஸ்) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 நவம்பர் 24ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி, இந்த மனுவை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். மேலும், எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
வழக்கு அரசியல் ஒருபுறம் இருக்க, இது பற்றி விதவிதமான வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. நிலம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பயந்தார் உதய நிதி ஸ்டாலின் என்றும், ஆதாரம் இல்லை என்று ராமதாஸ் கூறியதாகவும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சீனிவாசன் தப்பினார் என்றும் பல வதந்திகள் பரவின. இது தொடர்பாக அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் கட்டுரை வெளியிட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், தி.மு.க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதற்கு சீனிவாசன் பதில் அளித்துள்ளது போன்று இந்த நியூஸ் கார்டு உள்ளது.
நியூஸ் கார்டு வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. மேலும், முரசொலி நில விவகாரம் அக்டோபர் தொடக்கத்தில் கிளம்பியது. ஆனால், இந்த நியூஸ் கார்டில் மே 9, 2019 என்று தேதி உள்ளது. இதன் மூலம் பழைய நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளது உறுதியானது.
சீனிவாசன் தமிழக பா.ஜ.க-வின் செயலாளராக உள்ளார். அவர் மன்னிப்பு கேட்டார் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது. இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். பா.ஜ.க சீனிவாசன் முரசொலி விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டார் என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில், அவதூறு குற்றச்சாட்டு நோட்சை ஏற்று மன்னிப்பு கேட்காத டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க சீனிவாசன் மீது தி.மு.க தரப்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட செய்தி கிடைத்தது.
dinakaran.com | Archived Link 1 |
nakkheeran.in | Archived Link 2 |
தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம். “வழக்கமான வதந்தி” என்று ஒரே வரியில் முடித்துக்கொண்டனர்.
நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், “முரசொலி விவகாரம் “முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல ராமதாஸ்தான். சட்டப்படி அவருக்குத்தான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல; ராமதாஸ் என்று பாஜக சீனிவாசன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
